தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்: கூடலூரில் கடும் போக்குவரத்து நெரிசல்


தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்:  கூடலூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக புத்தாடை, பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் வரத்து அதிகரித்ததால் கூடலூர் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நீலகிரி

கூடலூர்

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக புத்தாடை, பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் வரத்து அதிகரித்ததால் கூடலூர் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர் மழையால் வரத்து குறைவு

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் பண்டிகைகளும் போதிய அளவு களை கட்ட வில்லை. இந்த நிலையில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாகவே தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு பொதுமக்கள் ஆயத்தமாகினர்.

இதனால் சமவெளி பகுதியில் உள்ள பஜார்களில் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தது. கூடலூர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கூடலூர் நகரம் உட்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. மேலும் பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் போனஸ் உள்ளிட்ட பண பலன்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள முக்கிய ஊர்களில் வியாபாரம் மிகவும் மந்தமாக இருந்தது.

கூடலூரில் போக்குவரத்து நெரிசல்

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கூடலூர் பகுதியில் மழை பெய்ய வில்லை. மாறாக நன்கு வெயில் தென்படுகிறது. காலநிலை நல்ல நிலையில் இருக்கின்ற சூழலில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் இனிப்பு பலகார கடைகள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு செல்கின்றனர்.

இதனால் கூடலூர் நகரத்தில் நேற்று கடும் வாகன நெரிசல் காணப்பட்டது. இந்த சமயத்தில் ஊட்டியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தின் டயர் பஞ்சர் ஆனது. இதனால் கூடலூரில் காலை 10 மணிக்கு தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் டிரைவர்கள், பொதுமக்கள் வாகனங்களை இயக்க முடியாமல் திணறினர்.


Next Story