ஆட்சிமொழி சட்ட வார விழா கொண்டாட்டம்


ஆட்சிமொழி சட்ட வார விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 3:49 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி சட்ட வார விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

தேனி

ஆட்சி மொழி சட்ட வாரம்

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ம் நாளை நினைவூட்டும் வகையில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒரு வார காலத்துக்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனரின் உத்தரவுப்படி, தேனி மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் வருகிற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. ஆட்சிமொழிச் சட்ட வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் நடக்கிறது.

இந்த ஆட்சிமொழிச் சட்ட வார விழா தொடர்பான நிகழ்வின் ஒருபகுதியாக ஆட்சிமொழிச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 18-ந்தேதி அன்று தேனி கம்மவார் கலைக்கல்லூரியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் ஆட்சிமொழிப் பட்டிமன்றம் நடக்கிறது. 19, 20-ந்தேதிகிளல் கலெக்டர் அலுவலகத்தில் அரசுப் பணியாளர்களுக்கு கணினித் தமிழ், ஆட்சிமொழிச் சட்டம், வரலாறு, தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுதல் போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

விளக்கக்கூட்டம்

21-ந்தேதி பெரியகுளத்தில் வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் இணைந்து வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்திட வலியுறுத்தி விளக்கக் கூட்டம் நடக்கிறது. 23-ந்தேதி சின்னமனூர் கிளை நூலகக் கூட்டரங்கில் தமிழ் அமைப்புகள், நிர்வாகிகளுடன் இணைந்து ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம் நடக்கிறது.

24-ந்தேதி தேனியில் அரசுப் பணியாளர்கள், தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள், பள்ளி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் ஆட்சிமொழி விழிப்புணர்வு ஊர்வலம் நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story