பள்ளி, கல்லூரிகளில் யோகா தின கொண்டாட்டம்


பள்ளி, கல்லூரிகளில் யோகா தின கொண்டாட்டம்
x

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் யோகாசனம் செய்தனர்.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் யோகாசனம் செய்தனர்.

யோகா தினம்

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஊட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகள் யோகாசனங்களை செய்து அசத்தினர். மேலும் அவர்கள் நடனமாடி யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், யோகா உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் நன்மை அளிக்கும். அனைத்து வயது பிரிவினரும் யோகா கற்றுக்கொள்ளலாம் என்றனர்.

ஊட்டி கோர்ட்டில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி முருகன் தலைமை தாங்கினார். நீதிபதிகள் ஸ்ரீதரன், ஸ்ரீதர், மோகனகிருஷ்ணன், தமிழினியன் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் கலந்துகொண்டு யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர்.

ராணுவ அதிகாரிகள்

குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரி வளாகத்தில் உள்ள ஏகலைவா அரங்கத்தில் யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராணுவ பயிற்சி கல்லூரி கர்னல் திருப்பாதி தலைமையில் 350 ராணுவ அதிகாரிகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு தரையில் அமர்ந்து மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம், பத்மாசனம், புஜங்காசனம் போன்ற யோகாசனங்களை செய்தனர்.

ஊட்டி அருகே ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மற்றும் அரசு, தனியார் பள்ளிகள், அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் யோகா தினம் கொண்டாடப்பட்டன. ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சிக்கு டீன் மனோகரி தலைமை தாங்கினார்.

கூடலூர்

கூடலூர் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் நேற்று உடல் வலிமையை கூட்டும் வகையில் யோகா பயிற்சி செய்தனர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் அய்யப்பன் பேசும்போது, யோகா செய்வதால் மனம், உடல் பலம் பெறுகிறது. நினைவுத் திறன் அதிகரிப்பதால் பாடங்களை எளிதில் புரிந்து படிக்க முடியும் என்றார். இதேபோல் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.

கூடலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் சர்வதேச யோகா தினத்தை கடைபிடித்தனர். இதையொட்டி அனைவரும் யோகா செய்தனர். அதற்கான பயிற்சியை மனவளக்கலை பேராசிரியர் பாஸ்கர் அளித்தார்.

தொடர்ந்து கூடலூர் மனவளக்கலை மன்றத்தில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் கூடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் கலந்துகொண்டார்.


Next Story