காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயியிடம் செல்போன் பறிப்பு


காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயியிடம் செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே உள்ள கோவிலூர் ஊராட்சி மொலப்பனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 36). விவசாயி. இவர் மரவேலைகளும் செய்து வருகிறார். நேற்று மதியம் விவசாயி ராஜா தனது உறவினர் வெள்ளியங்கிரி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் காரிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை ராஜா ஓட்டினார். நாகனம்பட்டி அரசு பெண்கள் கல்லூரி அருகே சென்றபோது, பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். திடீரென வேகமாக வந்த அந்த மோட்டார் சைக்கிள், ராஜாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதுவதுபோல் சென்றது. இதனால் ராஜாவின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியது. அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த நபர், ராஜாவின் பையில் இருந்த செல்போனை பறித்தார். பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்றது. பறிக்கப்பட்ட செல்போனின் மதிப்பு ரூ.22 ஆயிரம் ஆகும். இதுகுறித்து காரிமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போனை பறித்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story