மனு அளித்த 5 நிமிடத்தில் மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு செல்போன்
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்த 5 நிமிடத்தில் மாற்றுத்திறனாளிக்கு ரூ.12 ஆயிரத்து 500 மதிப்பிலான சிறப்பு செல்போனை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்த 5 நிமிடத்தில் மாற்றுத்திறனாளிக்கு ரூ.12 ஆயிரத்து 500 மதிப்பிலான சிறப்பு செல்போனை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய தீர்வு காணப்பட்டு வருகிறது.
அதன்படி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் கார்மேகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்களிடம் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 310 மனுக்கள் வரப்பெற்றன. மேலும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 31 மனுக்கள் பெறப்பட்டன.
மாற்றுத்திறனாளிக்கு உதவி
குறிப்பாக, தாரமங்கலம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கற்பகம் என்பவர் தனக்கு சிறப்பு வகை செல்போன் கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தார். பின்னர் அவரது மனுவின் மீது உடனடியாக பரிசீலனை மேற்கொண்டு, 5 நிமிடத்தில் அவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கென வழங்கப்படும் ரூ.12 ஆயிரத்து 500 மதிப்பிலான சிறப்பு செல்போனை கலெக்டர் கார்மேகம் வழங்கினார். மேலும், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரத்து 50 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்கள் என மொத்தம் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 250 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.