செல்போன்-மோட்டார்சைக்கிள் பறித்த 3 பேர் கைது
தஞ்சை அருகே என்ஜினீயரிங் மாணவரிடம் செல்போன்-மோட்டார்சைக்கிள் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தஞ்சாவூர்,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் பகுதியை சேர்ந்தவர் சிவகணேஷ் (வயது23). இவர் வல்லத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மன்னார்குடி பிரிவு சாலை அருகே சென்ற போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் மறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சிவகணேசை மிரட்டி செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அவர் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தஞ்சை ஜோதிநகரை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் வெங்கி என்ற வெங்கடேசன் (24), நாகை சாலை கவுதம் நகரை சேர்ந்த பூமிநாதன் மகன் வெங்கட் என்ற வெங்கடேசன் (24), திருவாரூர் வடபாதி பகுதியை சேர்ந்த அருணாச்சலம் மகன் வெங்கடேசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.