செல்போன் கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
செல்போன் வாங்கிய 5 மாதங்களில் பழுது ஏற்பட்டதால் சம்பந்தப்பட்ட செல்போன் கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
நாகர்கோவில்:
செல்போன் வாங்கிய 5 மாதங்களில் பழுது ஏற்பட்டதால் சம்பந்தப்பட்ட செல்போன் கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
செல்போன் பழுது
குமரி மாவட்டம் குஞ்சன்விளையை சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டிலுள்ள ஒரு செல்போன் கடையில் இருந்து ரூ.15,490-க்கு செல்போன் ஒன்று வாங்கினார். ஆனால் வாங்கிய 5 மாதங்களிலேயே செல்போனில் பழுது ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடைக்காரரிடம் செல்போனை கொடுத்து சரி செய்து தருமாறு சுரேந்திரன் கூறினார். அப்போது ரூ.4,167 செலுத்தினால் பழுது பார்த்து கொடுப்பதாக கடைக்காரர் தெரிவித்தார்.
ஆனால் 'வாரண்டி காலம் முடிவடையாத நிலையில் ஏன் பணம் கேட்கிறீர்கள்' என்று சுரேந்திரன் கேட்டார். எனினும் கடைக்காரர் பணம் கேட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுரேந்திரன் இதுதொடர்பாக வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ரூ.10 ஆயிரம் அபராதம்
இந்த வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர். இதைத் தொடர்ந்து செல்போன் கடையின் சேவை குறைப்பாட்டை சுட்டிக்காட்டி ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர் ஆகியோர் உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் புதிய செல்போன் அல்லது ஏற்கனவே செலுத்தப்பட்ட ரூ.15,490 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.