கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை
கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு போவதற்கு தடைவிதிப்பது பற்றி திண்டுக்கல்லை சேர்ந்த பக்தர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை காண்போம்.
திருப்பதி கோவிலுக்குள் யாரும் செல்போன் கொண்டு போக முடியாது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் அவ்வாறே செல்போன்கள் கொண்டு போக அனுமதி இல்லை.
செல்போன்களை டிக்கெட் வாங்கிக் கொண்டு லாக்கர்களில் வைத்துவிட வேண்டும். சாமி கும்பிட்டு திரும்பி வரும்போது டிக்கெட்டை கொடுத்து விட்டு செல்போன்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.
செல்போன்களுக்கு தடை
அதுபோல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் இனி செல்போன்கள் கொண்டு போக முடியாது. அங்கு செல்போன்களுக்கு தடைவிதிக்கும்படி மதுரை ஐக்கோர்ட்டு ஆணையிட்டு இருக்கிறது.
திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகராக இருக்கும் சீதாராமன் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்து இருந்தார்.
''சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்துவது, சுவாமிக்கு நடக்கும் தீபாராதனையை செல்போன்களில் பதிவு செய்வது, சிலைகள் முன்பு செல்பி எடுத்துக் கொள்வது, சிலைகளை படம் எடுப்பது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுகிறார்கள். எனவே திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போதுதான் நீதிபதிகள் மேற்கண்ட ஆணையைப் பிறப்பித்தார்கள்.
ஆதங்கம்
நீதிபதிகள் அப்போது வெளியிட்ட சில கருத்துகள், அவர்களின் மனவருத்தங்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளன.
* கோவிலுக்குள் நடக்கும் பூஜைகளை அர்ச்சகர்களே வீடியோ எடுத்து தனிப்பட்ட யூடியூப் சேனல்களில் பதிவிடுகிறார்கள். இது ஏற்கத்தக்கது அல்ல.
* திருப்பதி கோவிலில் வாசலைக்கூட படம் எடுக்க முடியாது. தமிழ்நாட்டில் சாமி சிலை முன்பு செல்பி எடுக்கும் அளவுக்கு சுதந்திரம் இருக்கிறது.
* கோவில்கள் சுற்றுலா தலங்கள் அல்ல. கோவிலுக்கு டீ-சர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்க முடியவில்லை.
இவ்வாறு ஆதங்கப்பட்ட நீதிபதிகள்
திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதை தடை செய்ய அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவிட்டு, அதன் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறநிலையத் துறை கமிஷனருக்கு உத்தரவிட்டும் இருக்கிறார்கள்.
ஆவல் அதிகரிப்பு
பொதுவாக புதிய இடங்களுக்கோ, தொன்மையான இடங்களுக்கோ செல்கிறபோது அதன் அடையாளமாக புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ஆவல் அனைவரிடமும் இருப்பது இயல்பே. அதுவும் செல்போன் மனிதர்களின் ஆறாவது விரலாக மாறிவிட்ட நிலையில் அது பேராவலாக அதிகரித்துவிட்டது என்றே சொல்லலாம்.
இந்தநிலையில் கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு போவதற்கு தடைவிதிப்பது பற்றி திண்டுக்கல்லை சேர்ந்த
பக்தர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை காண்போம்.
பாதாள செம்பு முருகன் கோவில் ஆதீனம் அறிவானந்தம்:- ஆலயம் என்பது மனதுக்கு நிம்மதியை தரும் ஆத்மார்த்தமான தலம். அங்கு வேண்டுதலை அமைதியாக நிறைவேற்ற செல்போன் நிச்சயம் இடையூறாக இருக்கும். ஆலயத்தில் செல்போனை பயன்படுத்தினால் மனம் பக்தியில் இருந்து விலகிவிடும். இறை தரிசனத்தை விட செல்போன் முக்கியமானது அல்ல. எனவே இறைவனை தரிசனம் செய்ய நினைப்பவர்கள் நிச்சயம் செல்போனை கொண்டு வரமாட்டார்கள். அதேபோல் ஆடையிலும் கட்டுப்பாடு அவசியம் தேவை. நாகரிகம் எனும் பெயரால் ஒழுக்கத்தை இழக்கும் சூழல் உருவாகி வருகிறது. சுற்றுலா செல்வது போன்று ஆடை அணிந்து கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
பிரசன்ன வெங்கடேஷ் (பூசாரி, திண்டுக்கல்) :- கோவில்களுக்கு செல்வது மன அமைதிக்காக மட்டுமே. அங்கு செல்போன்களை பயன்படுத்தினால் பக்தர்களுக்கு மன அமைதி கிடைக்குமா? என்பது சந்தேகமே. மேலும் செல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு, கோவில் கருவறையில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சை பாதிக்கும் என நம்பப்படுகிறது. தெய்வ வழிபாட்டுக்காக கோவிலுக்கு வரும்போது செல்போன் பயன்படுத்துவதை பக்தர்கள் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கோவிலில் செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கலாம்.
ஹேமா (திண்டுக்கல் மாலைப்பட்டி) :- இறைவனை தரிசனம் செய்வதற்காக தான் கோவிலுக்கு வருகிறோம். அந்த நேரத்தில் செல்போன் இருந்தால் யாராவது அழைத்து தொந்தரவு செய்வார்கள். தரிசனத்துக்காக காத்திருக்கும் நேரத்தில் கூட செல்போனில் விளையாடி கொண்டிருக்கின்றனர். அங்கு இறை பக்தி என்பது குறைந்து விடுகிறது. அதேபோல் கோவில்களில் இருக்கும் அபூர்வமான சிலைகள், பக்தர்களின் வழிபாடுகளை படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பரபரப்புகின்றனர். எனவே கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதிப்பது நல்ல விஷயம் தான். கோவிலில் இருக்கும் நேரத்திலாவது செல்போனை மறந்து மனநிறைவாக இறைவனை வணங்கலாம்.
சுப்புராஜ் (பழனி) :- உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களில் சிலர் செல்போன் மூலம் கருவறையில் இருக்கும் நவபாஷாண சிலையை படம் பிடிக்கின்றனர். கோவிலுக்குள் பக்தர்கள் புகைப்படம், வீடீயோ எடுக்க கூடாது என்று அதிகாரிகள், ஊழியர்கள் எச்சரித்து தடுக்கின்றனர். எனினும் பக்தர்கள் வீடீயோ, புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்கின்றனர். எனவே கோவிலில் செல்போன் கொண்டு வருவதற்கு தடை விதிப்பது நல்லது தான். பழனி முருகன் கோவிலிலும் பக்தர்கள் செல்போன் கொண்டு வரதடைவிதிக்க வேண்டும்.