சிவகாசியில் செல்போன் டவர் மாயம்
சிவகாசியில் செல்போன் டவர் மாயம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி,
சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்தவர் முத்துவேங்கடகிருஷ்ணன் (வயது 52). இவர் செல்போன் டவர்களை வைத்து பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் திருத்தங்கல் அருகே உள்ள எஸ்.என்.புரத்தில் கடந்த 2003-ம் ஆண்டு தனியார் செல்போன் நிறுவனத்துக்காக செல்போன் கோபுரம் அமைத்து பராமரித்து வந்துள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டு முத்துவேங்கடகிருஷ்ணன் பணியாற்றி வரும் தனியார் நிறுவனம் அந்த செல்போன் டவரை விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 15.12.2020 அன்று செல்போன் கோபுரத்தில் பழுது ஏற்பட்ட போது ஜெகதீசன் என்பவர் வந்து பார்த்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் மீண்டும் ஜெகதீசன் வந்த போது அங்கிருந்து செல்போன் டவர் மற்றும் அது தொடர்பான பொருட்கள் மாயமாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.16 லட்சத்து 84 ஆயிரத்து 791 ஆகும். செல்போன் டவர் மாயமானது குறித்து தனியார் நிறுவன அதிகாரி முத்துவேங்கடகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சினிமாவில் நடிகர் வடிவேல் கிணற்றை காணவில்லை என புகார் கொடுத்த நகைச்சுவை காட்சியை போல தற்போது செல்போன் டவர் காணவில்லை என்ற புகார் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.