ஆற்றின் குறுக்கே சிமெண்டு பாலம் கட்டித்தர வேண்டும்
கூத்தாநல்லூர் அருகே ஆற்றின் குறுக்கே சிமெண்டு பாலம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்,
கூத்தாநல்லூர் அருகே ஆற்றின் குறுக்கே சிமெண்டு பாலம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.
மூங்கில் பாலம்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள, கோம்பூர் கிராமத்துக்கும், வடகட்டளை கிராமத்துக்கும் இடையே அப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு வெள்ளையாற்றின் குறுக்கே மூங்கில் மரங்கள் மற்றும் நடைபாதையில் சென்று வர பலகைகள் கொண்டு மூங்கில் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தை வேளுக்குடி, பழையனூர், வடகட்டளை கோம்பூர், ஓகைப்பேரையூர், கானூர், மங்களாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சேதமடைந்தது
இந்த நிலையில், இந்த நடைபாலம் மூங்கில் மரங்களை கொண்டு அமைக்கப்பட்டதால், அடிக்கடி மூங்கில் மரங்கள் மற்றும் பலகைகள் மடிந்து சேதமடைந்து விடுகிறது. கடந்த சில மாதங்களாக மூங்கில் பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக, நடைபாதையில் அமைக்கப்பட்ட பலகைகள் விலகியுள்ளது. மேலும், பாலமும் ஆற்றில் ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.
புதிய சிமெண்டு பாலம்
இதனால், இந்த பாலத்தை கடந்து சென்று வருவதற்குள் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மிகவும் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே , ஆற்றில் தண்ணீர் திறப்பதற்கு முன்பு சேதமடைந்த மூங்கில் பாலத்தை அகற்றி விட்டு புதிதாக சிமெண்டு பாலம் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.