சிமெண்டு தரைத்தளம் அமைக்கும் பணி


சிமெண்டு தரைத்தளம் அமைக்கும் பணி
x

சிமெண்டு தரைத்தளம் அமைக்கும் பணி

தஞ்சாவூர்

புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு செல்லும் வழியில் சிமெண்டு தரைத்தளம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில்

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றான புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் தஞ்சையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது. இதனால் கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.

மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து பேரானந்தம் அடைவார்கள்.

திருப்பணிகள்

இந்த கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. 18 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி குடமுழுக்கு நடத்த கோவில் நிர்வாகமும், அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையும் முடிவு செய்தது. முதல்கட்டமாக மூலவர் கோபுரம், ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களை திருப்பணி செய்வதற்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் இருந்து தெப்பக்குளம் அருகே உள்ள கைலாசநாதர் கோவில் முன்பு வரை மேற்கூரை போடப்பட்டுள்ளது. இந்த மேற்கூரை போடப்பட்டுள்ள இடங்களில் சிமெண்டு தரைத்தளம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனால் அந்த வழியாக யாரும் செல்லாமல் இருப்பதற்காக இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் செல்வதற்கு பாதை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு திருப்பணிகள் ஒவ்வொன்றாக நடைபெற்று வருவதாக கோவில் பணியாளர்கள் தெரிவித்தனர்.

------------------------------

இன்று முதல் ஆவணி ஞாயிற்றுக்கிழமை:

தெப்பக்குளத்தில் நிரப்பப்பட்ட தண்ணீர்

புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் ஆவணி பெருவிழா மிக சிறப்பாக நடைபெறும். இந்த நாட்களில் தேரோட்டம், தெப்ப உற்சவம் போன்றவை நடைபெறும். ஆனால் பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் திருவிழாக்கள் நடைபெறாது. ஆனால் வழக்கம்போல் அம்மனை தரிசனம் செய்யலாம். பொதுவாக ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நடந்தே கோவிலுக்கு வருவது உண்டு.

அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆவணி ஞாயிற்றுக்கிழமையாகும். வழக்கம்போல் பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி அம்மனை தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தெப்பக்குளத்தில் கால்கள், கைகளை கழுவி கொண்டும், சிலர் குளித்து விட்டும் செல்வார்கள். அவர்களின் வசதிக்காக தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story