மண் லாரிகளால் சிமெண்டு சாலை சேதம்; கிராம மக்கள் மறியல்


மண் லாரிகளால் சிமெண்டு சாலை சேதம்; கிராம மக்கள் மறியல்
x

பழனி அருகே மண் லாரிகளால் சிமெண்டு சாலை சேதம் அடைந்து வருகிறது. இதனை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

மண் லாரிகள்

பழனி அருகே சண்முகநதி கரையோர தோட்ட பகுதியில் இருந்து லாரிகள் மூலம் மண் அள்ளப்பட்டு வருகிறது. மண் அள்ளி செல்லும் இந்த லாரிகள், பழனி அருகே அ.கலையம்புத்தூர் காமராஜர்புரத்தில் உள்ள சிமெண்டு சாலை வழியாக செல்கின்றன. இதனால் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறி விட்டது.

எனவே காமராஜபுரம் வழியாக மண் லாரிகள் செல்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும் அந்த வழியாக தொடர்ந்து மண் லாரிகள் சென்று வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று காலை காமராஜபுரம் பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அ.கலையம்புத்தூருக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் உடுமலை-கொழுமம் சாலை சந்திப்பு பகுதியில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

சாலை மறியல்

இதுகுறித்து தகவல் அறிந்த பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் உள்ள சாலை மிகவும் குறுகியது. இதன் வழியாக மாட்டு வண்டி, டிராக்டர், அறுவடை எந்திரம் ஆகியவை சென்று வருகின்றன. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் தற்போது அதிக பாரம் ஏற்றிவரும் மண் லாரிகளால் தெருவின் சிமெண்டு சாலையில் பெரும் பள்ளம் உருவானது. தற்போது அதில் செங்கற்களை கொட்டியுள்ளனர்.

இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் லாரிகள் வேகமாக செல்வதால், சாக்கடை கால்வாய் சேதம் அடைந்து வருகிறது. எனவே எங்கள் தெருவில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். மேலும் எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்றனர்.

இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story