தீவட்டிப்பட்டியில் சிமெண்டு கடைக்காரர் கொலை:15 வயது சிறுவன் உள்பட 2 பேர் கைதுபரபரப்பு வாக்குமூலம்


தீவட்டிப்பட்டியில் சிமெண்டு கடைக்காரர் கொலை:15 வயது சிறுவன் உள்பட 2 பேர் கைதுபரபரப்பு வாக்குமூலம்
x

தீவட்டிப்பட்டியில் சிமெண்டு கடைக்காரர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகாரை சேர்ந்த 15 வயது சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

ஓமலூர்

சிமெண்டு கடை

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 32). இவரும், சேலம் மாவட்டம் காடையாம்பட்டி சந்தைப்பேட்டையை சேர்ந்த பிரேம்குமார் (36) என்பவரும், தீவட்டிப்பட்டியில் கம்பி மற்றும் சிமெண்டு மொத்த வியாபார கடை நடத்தி வந்தனர். இந்த கடையில் பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சந்தோஷ், பிரேம்குமார் ஆகியோர் கடையை பூட்டி விட்டு, அதில் விற்பனையான ரூ.4 லட்சத்தை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிள்களில் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது அங்கு அவர்களது கடையில் வேலை பார்க்கும் பீகார் மாநிலம் பேகுசிரா பகுதியை சேர்ந்த சோபித் (19), அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஆகியோர் வந்தனர்.

குத்திக்கொலை

அவர்கள் சந்தோஷ் மற்றும் பிரேம்குமாரிடம் பேசி கொண்டிருந்தனர். திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தோசை குத்தி விட்டு, அவர் கையில் வைத்திருந்த ரூ.4 லட்சத்தை பறிக்க முயன்றனர். இதில் சந்தோசுடைய மார்பு, முதுகு, தொடை ஆகிய இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. சந்தோசின் அலறல் சத்தம் கேட்டு பிரேம்குமார் ஓடி வந்தார். அப்போது சோபித் மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் அவரையும் கத்தியால் குத்த முயன்றனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் சுவர் ஏறி குதித்து, அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

பிரேம்குமார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன், சந்தோசை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

மேலும் ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையிலான போலீசார் தப்பி ஓடிய சோபித் மற்றும் 15 வயது சிறுவனை பிடித்து, போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது சோபித் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த சில ஆண்டுகளாக கம்பி மற்றும் சிமெண்டு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன். இந்தநிலையில் எனக்கும், 15 வயது சிறுவனுக்கும் கடந்த 2 மாதங்களாக சம்பளம் தரவில்லை. இதுகுறித்து நாங்கள் கேட்டபோது, சந்தோஷ், பிரேம்குமார் ஆகியோர் சம்பள பாக்கியை தர மறுத்துவிட்டனர். இதனால் நாங்கள் அவர்கள் கடையை பூட்டி விட்டு செல்லும் போது, பணத்தை கொள்ளை அடிக்க எண்ணினோம்.

ஆனால் சம்பள பாக்கி கொடுக்காத ஆத்திரத்தில் சந்தோசை குத்திக்கொலை செய்து விட்டோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

முற்றுகை

இதனிடையே கொலை செய்யப்பட்ட சந்தோசின் உறவினர்கள் நேற்று தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் சோபித் மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் வேலைக்கு சேர்ந்து சில மாதமே ஆகிறது, அவர்களுக்கு பாக்கி இல்லாமல் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்றனர். மேலும், வியாபார பணத்தை கொள்ளை அடிக்க அவர்கள் சந்தோசை கொலை செய்ததாக தெரிவித்தனர்.

போலீசார் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் சோபித் மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.


Next Story