பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணி
கழுகுமலையில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.
நாலாட்டின்புத்தூர்:
கழுகுமலை பகுதிகளில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு எடுத்து பள்ளிக்கு அனுப்பும் கள ஆய்வு பணி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது. கழுகுமலை மட்டுமன்றி வானரமுட்டி, குமரெட்டியாபுரம் ஆகிய கிராமப்புற பகுதிகளிலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது சில பகுதிகளில் பள்ளி செல்லாத குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கழுகுமலையில் விகாஷ் என்ற மாணவன் மீண்டும் படிப்பை தொடர அரசு பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டு அவருக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது. இந்த பணியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான்சன், கயத்தாறு வட்டார கல்வி அலுவலர் விஜயராஜ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிதம்பரம், ஆசிரியர் பயிற்றுநர்கள் செந்தாமரை கண்ணன், மோகனமுருகன், நாயகம் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.