தூத்துக்குடியில் நூற்றாண்டு விழா:"அரசின் திட்டங்களுக்கு முன்னோடியாக கத்தோலிக்க மறைமாவட்டம் விளங்குகிறது":சபாநாயகர்
தூத்துக்குடியில் நூற்றாண்டு விழா: "அரசின் திட்டங்களுக்கு முன்னோடியாக கத்தோலிக்க மறைமாவட்டம் விளங்குகிறது" என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
அரசின் திட்டங்களுக்கு முன்னோடியாக கத்தோலிக்க மறைமாவட்டம் விளங்குகிறது என்று தூத்துக்குடியில் நடந்த மறைமாவட்ட நூற்றாண்டு விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசினார்.
மறைமாவட்ட நூற்றாண்டு விழா
தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டம் கடந்த 1923-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி திருச்சி மறைமாவட்டத்தில் இருந்து பிரித்து தனி மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டது. இந்த மறைமாவட்டம் உருவாக்கப்பட்ட நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மறைமாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து தூத்துக்குடி சின்னக்கோயில் வளாகத்தில் நூற்றாண்டு நிறைவு விழா வரவேற்பு நிகழ்ச்சியானது சமய, சமூக, அரசியல் நல்லிணக்க விழாவாக நடந்தது. விழா ஒருங்கிணைப்பாளர் அருள்தந்தை ஜேம்ஸ் விக்டர் முன்னுரையாற்றினார். தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி வரவேற்றார்.
விழாவுக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசின் திட்டங்களுக்கு முன்னோடி
விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-
முதன்முதலில் புன்னக்காயலில் அச்சு எந்திரத்தை நிறுவியவர் அன்ட்ரிக் அடிகளார். இந்த மறைமாவட்டம் தொடங்கிய பின்னர், வடக்கன்குளத்தில் பணியாற்றிய முதல் குருவானவரும், உதவி தலைமை ஆசிரியராகவும் இருந்தவர் தனிநாயகம். இவர் கடந்த 1948-ம் ஆண்டு தமிழ் இலக்கிய கழகத்தை உருவாக்கினார். முதல் உலக தமிழ் மாநாட்டை மலேசியாவில் நடத்தினார். 2-வது மாநாட்டை சென்னையில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணாவையும், கருணாநிதியையும் அழைத்து நடத்தினார். இவ்வாறு அவர் தமிழுக்கு ஆற்றியத் தொண்டு அளப்பரியது.
இயேசு கிறிஸ்து மனிதராக பிறந்து மக்களுக்காக எவ்வாறு பாடுபட்டாரோ, அவ்வாறே மறைமாவட்ட ஆயர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் பாடுபட்டு கொண்டிருப்பதால்தான் இந்த சமூகம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. கல்வி, மருத்துவம் சமூக மேம்பாடு என அவர்களின் பணிகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அனைவருக்கும் கல்வி, ஏழைகளுக்கு உதவி, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட அரசின் திட்டங்களுக்கு முன்னோடியாக கத்தோலிக்க மறைமாவட்டம் விளங்குகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கனிமொழி எம்.பி.
விழாவில் கனிமொழி எம்.பி. பேசுகையில், "தமிழ் சமூகத்தில் மத வேறுபாடுகள், சாதி வேற்றுமைகள் ஆகியவை இல்லை. ஆனாலே சிலர் இந்த தமிழ் சமூகத்தில் வேறுபாடுகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். தமிழகத்தில் 18 சாதி பெண்கள் மேலாடை அணிய மறுப்பு தெரிவிக்கப்பட்ட நேரத்தில், அவர்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்தது, பெண்களும் படிக்க வேண்டும் என்ற உரிமையை உருவாக்கித்தந்தது, உருவாக்கிக்கொண்டிருப்பது கிறிஸ்தவ திருச்சபைகள்தான். இன்று நம் அனைவருக்கும் கல்வி கிடைத்துள்ளது. அதன்மூலம் பல்வேறு கனவுகள், அனைத்தையும் சாதிக்கலாம் என்ற தன்னம்பிக்கை ஆகியவை கிடைக்கிறதென்றால், அதற்கு காரணமானவர்களையும், நாம் கடந்து வந்த பாதைகளையும், நம்முடைய உரிமையை காப்பாற்றுபவர்கள் யார்? என்பதையும் இன்றைய தலைமுறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும்" என்றார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன், பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி செயலர் ஏ.பி.சி.வீ.சண்முகம், பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், மாவட்ட அரசு ஹாஜி முஜூபூர் ரஹ்மான், தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல குருத்துவ காரியதரிசி இம்மானுவேல் வான்ஸ்டக், பொனோ வென்சர் ரோச், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங், கான்ஸ்டான்டின் ரவீந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.