மத்திய-மாநில அரசுகள் வரிகளை விதித்து மக்களுக்கு வலிகளை தருகிறது - பிரேமலதா விஜயகாந்த்


மத்திய-மாநில அரசுகள் வரிகளை விதித்து மக்களுக்கு வலிகளை தருகிறது - பிரேமலதா விஜயகாந்த்
x

மதுரையில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை,

மதுரையில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக துணை பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது,

தமிழகத்தின் அரசியல் தலைநகரம் மதுரையாகும். மதுரை மண்ணில் தான் தேமுதிக தொடங்கப்பட்டது. எங்களது திருமணம் மற்றும் குலதெய்வ வழிபாடு அரசியல் மாநாடுகள் என்று அனைத்துமே மதுரையில் தான் தேமுதிக நடத்தி வருகிறது.

இந்த மதுரை மண்ணில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்றைக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தேமுதிக ஆளும் கட்சி அல்ல, ஆண்ட கட்சியும் அல்ல, ஆனாலும் மக்கள் இங்கு திரண்டு இருக்கிறீர்கள். ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் நூறும், பீரும் கொடுத்து கூட்டம் கூட்டுகிறார்கள். அந்த வரிசையில் தற்போது பாரதிய ஜனதாவும் சேர்ந்திருக்கிறது.

ஆனால் தேமுதிக கூட்டுகின்ற கூட்டம் கொள்கை மீது பற்று கொண்ட மக்கள் கூடுகின்ற கூட்டமாகும். தமிழகத்தில் ஆளுகின்ற திமுக அரசு தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் கொடுக்காத வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. மின்கட்டணத்தை உயர்த்துவோம் என்று தேர்தலுக்கு முன்பு சொல்லவில்லை.

ஆனால் இப்போது மின்கட்டணத்தை அதிகரித்து இருக்கிறார்கள். அதுபோல மத்திய அரசு ஜிஎஸ்டி என்ற போர்வையில் மக்கள் மீது தினமும் வரியை சுமையை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் மீது மத்திய-மாநில அரசுகள் வரி என்ற பெயரில் வலியை ஏற்படுத்தி வருகின்றன. இதனை தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

கருணாநிதியின் நினைவாக கடலில் பேனா சின்னத்தை அமைக்கப் போவதாக சொல்லுகிறார்கள். அவர்கள் தாராளமாக அமைக்கட்டும் மக்கள் வரிப்பணத்தில் அமைக்காமல் திமுக அறக்கட்டளை சார்பில் அண்ணா அறிவாலயத்தில் அமைக்கட்டும். யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது தேவையில்லாத ஒன்றாகும்.

மத்திய-மாநில அரசுகள் அரசை நடத்த மக்கள் மீது வரி விதிப்பதாக கூறுகிறார்கள். அது தேவையில்லை ஆண்ட கட்சியும் ஆளுகின்ற கட்சியையும் சேர்ந்த அமைச்சர்களிடம் இருக்கின்ற ஊழல் பணத்தை வெளியே கொண்டு வந்தாலே அரசை தாராளமாக நடத்தி விடலாம் .

மக்கள் மீது தேவையில்லாத வரியை விதிப்பதை தவிர்க்கலாம் எனவே மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை தேமுதிக தொடர்ந்து எதிர்க்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story