நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு
ஈரப்பதம் குறித்து அறிந்து கொள்வதற்காக திருச்சி மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் மையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஈரப்பதம் குறித்து அறிந்து கொள்வதற்காக திருச்சி மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் மையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
மத்திய குழு ஆய்வு
தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக லால்குடி அருகே ஜெங்கமராஜபுரம், ஆலங்குடி மகாஜனம், செம்பரை, திண்ணியம் ஆகிய இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தின் தற்போதைய நிலையை உயர்த்தி கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய குழு கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தது. இதில் அரசின் உணவு வினியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் துணை இயக்குனர் கான் தலைமையிலான குழுவினர் யூனூஸ் (தொழில்நுட்பம்), இந்திய உணவுக் கழகத்தின் உதவி பொது மேலாளர் குணால் குமார், கணேசன் (தரக்கட்டுப்பாடு), தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதல் நிலை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) செந்தில் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டனர். அப்போது கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து, விவசாயிகளிடமும், அலுவலர்களிடமும் கேட்டறிந்தனர். மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், அது தொடர்பான விவரங்களை மத்திய குழுவினரிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் பாலமுருகன், வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.