மத்திய அரசு பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்
ஒரத்தநாடு, ஊரணிபுரத்தில் மத்திய அரசு பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.
ஒரத்தநாடு:
விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பதாக கூறி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நேற்று ஒரத்தநாடு கடைவீதியில் நடந்தது. போராட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் மலர்க்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பாப்பநாடு கடைவீதியில் விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் மோகன்தாஸ், திருவோணம் ஒன்றியம் ஊரணிபுரம் கடைவீதியில் ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.