மத்திய அரசின் வேலைவாய்ப்பு மேளா: சென்னையில் 646 பேருக்கு பணி நியமன ஆணை


மத்திய அரசின் வேலைவாய்ப்பு மேளா: சென்னையில் 646 பேருக்கு பணி நியமன ஆணை
x

மத்திய அரசின் வேலைவாய்ப்பு மேளா மூலம் சென்னையில் 646 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

சென்னை,

ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு பணிகளில் புதிய வேலைவாய்ப்பு வழங்கும் 'ரோஸ்கர் மேளா' என்ற புதிய திட்டத்தின் மூலம் 6-வது கட்டமாக இந்தியா முழுவதும் நேற்று 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் 43 இடங்களில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திரமோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் நடந்த விழாவில் 884 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நடந்த விழாவில் 646 பேருக்கு மத்திய அரசு அதிகாரிகள் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

வங்கி-ரெயில்வே துறையில் வேலை

11 பொதுத்துறை வங்கிகள், வருவாய்த்துறை, பாதுகாப்பு அமைச்சகம், துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம், ரெயில்வே, தபால்துறை, சுங்கம் மற்றும் வீட்டுவசதி, நகர்ப்புற விவகார துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

'இவர்களுக்கு ஆன்லைன் மூலம், தங்களின் துறையில் எவ்வாறு பணியாற்ற வேண்டும், எத்தகைய தவறுகளில் ஈடுபடக் கூடாது என்பது பற்றி அறிவுரையும் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து, இவர்கள் தங்களுக்கான துறையில் வழக்கமான பணியில் ஈடுபடுவர். இந்தியா முழுவதும் 'ரோஸ்கர் மேளா' திட்டத்தின் கீழ் இதுவரை பணி நியமன ஆணைகளை பெற்றவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரமாக உயர்ந்துள்ளது' என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story