டெல்டா மாவட்டங்களை அழிக்க மத்திய அரசு சூழ்ச்சி செய்கிறது
‘வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அமைத்து டெல்டா மாவட்டங்களை அழிக்க மத்திய அரசு சூழ்ச்சி செய்கிறது’ என்று சேலத்தில் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
'வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அமைத்து டெல்டா மாவட்டங்களை அழிக்க மத்திய அரசு சூழ்ச்சி செய்கிறது' என்று சேலத்தில் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
ஆன்லைன் சூதாட்ட மசோதா
சேலம் மேற்கு மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 17 இடங்களில் பா.ம.க. கட்சி கொடியேற்று விழா நேற்று நடந்தது. பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி வைத்தார். முன்னதாக அவர் சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேட்டூர்- சேலம் உபரிநீர் திட்டத்தில் பயன்படுத்தியது போக மீதமுள்ள 620 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. நாங்கள் கேட்பது வெறும் 5 டி.எம்.சி. தண்ணீரைத்தான். ஒரு டி.எம்.சி. தண்ணீரை பனமரத்துபட்டி ஏரிக்கும், மீதமுள்ள 4 டி.எம்.சி. தண்ணீரை சேலம் மாவட்டத்தில் உள்ள பிற ஏரி, குளங்களிலும் நிரப்ப வேண்டும்.
தமிழக அரசு மீண்டும் அறிவித்துள்ள காவிரி- குண்டாறு திட்டத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. அதற்கு ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். தமிழக அரசு நீர்மேலாண்மை திட்டத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எங்களது கோரிக்கை நீர்மேலாண்மை திட்டத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி என 5 ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்க ேவண்டும்.
அனுமதிக்க மாட்டோம்
சேலம் இரும்பாலை 500 ஏக்கர் நிலத்தில் உள்ளது. இரும்பாலைக்கு சொந்தமான மீதமுள்ள 3,500 ஏக்கர் நிலத்தில் அரசு பயனுள்ள திட்டங்கள் கொண்டு வரவேண்டும். அப்படி இல்லாமல் தனியாரிடம் விற்க முனைந்தால் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
தமிழ்நாடு அரசு தற்போது 2-வது முறையாக நிறைவேற்றி உள்ள ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு தமிழ்நாட்டு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த மசோதா இயற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்ட இடைப்பட்ட காலத்தில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்கள் இறப்புக்கு கவர்னர்தான் காரணம். கவர்னரை கையெடுத்து கும்பிடுகிறேன். தயவு செய்து கையெழுத்து போடுங்கள். தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்களை காப்பாற்றுங்கள். தமிழ்நாட்டு இளைஞர்களை காப்பாற்றுங்கள்.
நிலக்கரி சுரங்கங்கள்
என்.எல்.சி.யில் தற்போது சுரங்கம்-1, சுரங்கம் 1ஏ, சுரங்கம்-2 என 3 சுரங்கங்கள் இயங்கி கொண்டிருக்கிறது. அடுத்ததாக 3 சுரங்கத்திற்காக ரூ.14 ஆயிரம் கோடியில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் என்.எல்.சி. நிறுவனம் முடிவு செய்து அதற்காக ரூ.3 ஆயிரத்து 575 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்து இருக்கிறார்கள். இந்த மூன்றாவது சுரங்கத்திற்காக 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளார்கள்.
அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் மொத்தம் 141 சுரங்கங்களுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு, அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி, தஞ்சாவூர் ஒரத்தநாடு வடசேரி ஆகியவை ஆகும். மேலும் வீராணம் புதிய நிலக்கரி திட்டம், பாளையங்கோட்டை நிலக்கரி திட்டம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருகிறது. இந்த நிலக்கரி சுரங்கங்களால் காவிரி டெல்டா பகுதியை அழிக்க மத்திய அரசு சூழ்ச்சி செய்கிறது. தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டசபை கூட்டத்தொடரில் புதிய நிலக்கரி சுரங்கங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு
தி.மு.க. நடத்திய சமூக நீதி மாநாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்- அமைச்சர் பேசியிருக்கிறார். சமூக நீதி பேசுகிற தி.மு.க. அரசு முதலில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதே நேரத்தில் 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கும், சாதிவாரி கணக்கெடுப்புக்கும் சம்பந்தமே இல்லை. சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டிய தேவை, 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கு மட்டும்தான்.
நீட் தேர்வு தேவை இல்லாதது. இது கொள்கை முடிவு. அந்தந்த மாநில அரசிடம் அதனை விட்டு விட வேண்டும். மத்திய பா.ஜனதா அரசு ஒரே நாடு, ஒரே மொழி என்ற அடிப்படையில் நீட் தேர்வை கொண்டு வந்துள்ளார்கள். சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வுக்கு விரைவில் விலக்கு பெற தமிழக அரசு வேறு விதமாக அணுகி தீர்வு பெற வேண்டும். நீட் தேர்வில் ஒரே ஆறுதல் என்னவென்றால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டும்தான். மற்ற கட்சிகள் எல்லாம் தேர்தல் கூட்டணி போடுவதை பற்றியே பேசுகின்றன. நாங்கள் அப்படி அல்ல. எங்களுக்கு மக்கள் நலன் மட்டும்தான் முக்கியம். எனவேதான் நாங்கள் மக்கள் பிரச்சினைகளை பேசுகிறோம்.
தமிழ்புரட்சி
தமிழ்நாடு குடிகார நாடாக மாறி வருகிறது. மதுவுக்கு எதிராக போராடிய தி.மு.க. அரசு, இன்று மதுவை விற்றுதான் அரசை நடத்த வேண்டிய நிலையில் இருக்கிறது. மதுவால் எத்தனை இழப்புகள் ஒவ்வொரு நாளும் நடந்து வருகிறது என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.
எந்த மாநிலத்திலும் மாநில மொழிகளை படிக்காமல் பட்டம் பெற முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழை படிக்காமல் பட்டம் பெற முடியும். தி.மு.க. ஆட்சியில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற வார்த்தை மட்டுமே உள்ளது. ஆனால் ஒரு கடையின் பெயர் பலகையில் கூட தமிழ் இல்லை. இதே நிலை சென்றால் இளைஞர்கள் மத்தியில் தமிழ் புரட்சி வரும்.
எங்களுடைய இலக்கு 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்தான். அப்போது எங்களது கட்சியின் கொள்கையுடைய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம். அதுதான் எங்களது இலக்கு. அதற்கு ஏற்ப வியூகங்களை வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் எடுப்போம்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.
பேட்டியின் போது பா.மக. கவுரவ தலைவர் ஜி.கே.மணி., எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம், வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி, முன்னாள் எம்.பி. தேவதாஸ், பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் வக்கீல் விஜயராசா, ராஜசேகரன், ஜெயபிரகாஷ், மாவட்ட தலைவர் கதிர்ராசரத்தினம் உள்பட பலர் உடனிருந்தனர்.