அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு


அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 11 Feb 2023 12:56 AM IST (Updated: 11 Feb 2023 1:08 AM IST)
t-max-icont-min-icon

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு

மதுரை

அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 2019-ம் ஆண்டு முதல் இயங்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக கரும்பு பற்றாக்குறை காரணமாக இந்த ஆலை இயங்காமல் உள்ளது. தமிழக அரசு இந்த ஆலையை இயக்க தேவையான முன்னேற்பாடு குறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டி அமைத்தது. அந்த கமிட்டி, இந்த ஆலையை இயங்க ரூ.26 கோடியே 50 லட்சம் நிர்வாக ரீதியாக தேவைப்படுகிறது. ஆலையின் அரவை பகுதிக்குள் குறைந்தபட்சம் அரவை காலத்திற்கு ஒரு லட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்து தமிழக அரசுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பித்தது.

இந்தநிலையில் மத்திய சர்க்கரைத்துறை ஆணைய தலைமை பொறியாளர்கள், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் தலைமை பொறியாளர் பிரபாகரன் தலைமையில் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மேலாண்மை இயக்குனர் செந்தில்குமாரி முன்னிலையில் நேற்று ஆலையின் எந்திர பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்விற்கு பின்னர் இந்த ஆலை இயக்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது. ஆனால் கரும்பு மட்டும் பற்றாக்குறையாக உள்ளது. விவசாயிகள் ஆலையின் அரவைக்கு தேவையான கரும்புகளை ஆலை நிர்வாகத்தில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்றனர்.

ஆய்வின்போது தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க தலைவர் பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் மொக்கமாயன், கதிரேசன், முருகன், நல்லமணி காந்தி, அழகர்சாமி உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story