மதிப்பு கூட்டுவது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு
சிறுதானிய உற்பத்தி மதிப்பு கூட்டுவது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சிறுதானிய உற்பத்தி மதிப்பு கூட்டுவது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதிகாரிகள் ஆய்வு
ஒரு மாவட்டம் ஒரு பொருள் என்னும் அணுகுமுறையின் கீழ் விருதுநகர் மாவட்டம் சிறுதானியத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு அதிகாரிகள், முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், உற்பத்தி இயக்குனரகம் ஹைதராபாத் ஸ்ரீகாந்த் மற்றும் திட்ட ஆலோசகர் ஹிமான்சுபி கோடோ ஆகியோர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
சிறுதானியங்கள் சாகுபடி குறித்தும், சாகுபடி அதிகரிக்கவும் மதிப்பு கூட்டும் எந்திரங்களுக்கு வழங்கப்படும் வங்கி கடன் உதவி மற்றும் மானியங்கள் குறித்து விளக்கினர். மேலும் சிறுதானிய உணவுகளை பிரபலப்படுத்தும் நோக்கில் உணவுத் திருவிழா நடத்திடவும், அரசு அதிகாரிகள் சிறுதானிய உணவு பயன்பாட்டினை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள விவசாயத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.
கலந்துரையாடல்
இதனைத்தொடர்ந்து விவசாயம் மற்றும் அதனை சார்ந்த துறை அதிகாரிகள், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், உதவி திட்ட அலுவலர், மகளிர் திட்டம், வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி, நபார்டு வங்கி பொது மேலாளர், முன்னோடி வங்கி மேலாளர், அரசு வங்கியின் முதன்மை மேலாளர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் மத்திய அரசு அதிகாரிகள் கலந்துரையாடினர்.
மத்திய அரசு குழுவினர் அனைத்து கருத்துகளையும் அதிகாரிகளிடம் கவனமுடன் கேட்டறிந்து சிறுதானியங்கள் குறித்து அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உற்பத்தியை அதிகப்படுத்த உற்பத்தியாளர் உணவுப்பொருளை மதிப்பு கூட்டி உணவு பொருட்களை பொதுமக்களிடையே பிரபலப்படுத்துவதன் மூலம் சிறுதானியத்தின் நன்மைகள் அனைவரையும் சென்றடைய வாய்ப்பு ஏற்படும் என்றும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அலுவலர்கள் இணைந்து இதற்கான ஒரு செயல் திட்ட அறிக்கை தயார் செய்து ஒப்புதலுக்கு அனுப்பினால் தேவையான வழிகாட்டுதல்களும் நிதி உதவியும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.