காலை உணவு திட்டத்தை மத்திய அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர்


காலை உணவு திட்டத்தை மத்திய அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர்
x

வேலூர் மாநகராட்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர்.

வேலூர்

வேலூர் மாநகராட்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அதிகாரிகள் பார்வையிட்டனர்

வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 48 பள்ளிகளில் படிக்கும் 3,250 மாணவ-மாணவிகளுக்கு தினமும் காலை வித விதமான உணவு வழங்கப்படுகிறது. இந்த காலை உணவை தயாரிக்க வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நவீன வசதிகளுடன் சமையல் கூடம் கட்டப்பட்டுள்ளன. இங்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள் வாகனங்கள் மூலம் 48 பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தை புதுடெல்லியில் உள்ள மத்திய தலைமை செயலக உதவிப்பிரிவு அதிகாரிகள் 8 பேர் அடங்கிய குழுவினர் நேற்று நேரில் பார்வையிட்டனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகைப்பொருட்கள் உள்ளிட்டவற்றையும், உணவு தயாரிக்கும் முறைகள் மற்றும் சமையல் பாத்திரங்கள், எந்திரங்களை பார்வையிட்டு கேட்டறிந்தனர். மேலும் தயார் செய்யப்பட்ட உணவுகள் வாகனங்கள் மூலம் எவ்வாறு கொண்டு செல்லப்படுகிறது என்பதை உடன் சென்று பார்வையிட்டனர்.

உணவு சாப்பிட்டனர்

அதைத்தொடர்ந்து வேலூர் அலமேலுமங்காபுரம் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்குவதையும், அவர்கள் சாப்பிடுவதையும் பார்வையிட்டனர். அப்போது அவர்கள், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறினார்கள். பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து அந்த உணவை சாப்பிட்டனர்.

மேலும் மாணவர்களிடம் உணவின் ருசி, தரம் மற்றும் காலை உணவின் முக்கியத்துவம் குறித்து கேட்டறிந்தனர். இந்த குழுவினர் தங்களின் பயிற்சிக்காக ஓரிருநாட்கள் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பார்வையிட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சீனிவாசன், வேலூர் மாநகர் நல அலுவலர் கணேஷ், சுகாதார அலுவலர் லூர்துசாமி, உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story