சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்
சிறுபான்மையின மாணவ-மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
உதவித்தொகை
தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ம் கல்வி ஆண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி., வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு இணைய தளத்தில் (என்.எஸ்.பி.) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள்
தகுதியான மாணவ- மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 30.9.2022 வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி - வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு 31.10.2022 வரையிலும் மேற்படி இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் (என்.எஸ்.பி.) ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய யு.டிஐ.எஸ்.இ., ஏ.ஐ.எஸ்.எச்.இ., என்.சி.வி.டி. குறியீட்டு எண்ணை மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
வழிகாட்டி நெறிமுறைகள்
இந்த திட்டம் தொடர்பான இந்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schems என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.