91 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு முதன்மைக்கல்வி அதிகாரி கடிதம்
தஞ்சை மாவட்டம் முழுவதும் பொதுத்தேர்வு எழுதும் 91 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு முதன்மைக்கல்வி அதிகாரி கடிதம் அனுப்பி உள்ளார். இந்த கடிதம் பள்ளிகள் மூலம் நேரடியாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.
தஞ்சை மாவட்டம் முழுவதும் பொதுத்தேர்வு எழுதும் 91 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு முதன்மைக்கல்வி அதிகாரி கடிதம் அனுப்பி உள்ளார். இந்த கடிதம் பள்ளிகள் மூலம் நேரடியாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.
பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 13-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி நடைபெறுகிறது. இதே போல் 10, 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் பொதுத்தேர்வு நடைபெறுகிறது.
இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி கடிதம் எழுதி அனுப்பி உள்ளார்.
அதன்படி தஞ்சை தென்கீழ் அலங்கத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடிதத்தை முதன்மைக்கல்வி அதிகாரி சிவக்குமார் நேரில் சென்று வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் 33 ஆயிரத்து 178 பேருக்கும், 11-ம் வகுப்பு பயிலும் 28 ஆயிரத்து 940 பேருக்கும், 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் 29 ஆயிரத்து 348 பேருக்கும் என மொத்தம் 91 ஆயிரத்து 466 பேருக்கு இந்த கடிதம் வழங்கப்படுகிறது.
100 சதவீதம் தேர்ச்சி
கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 16-வது இடமும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 13-வது இடமும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 21-வது இடமும் பிடித்தோம். மாணவர்கள் அனைவரும் முறையாக வகுப்புகளுக்கு வந்து ஆசிரியர்கள் சொல்வதை படித்தாலே 100 சதவீதம் தேர்ச்சியை அடையலாம். எனவே மாணவர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்களுக்கு கடிதம்
மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தில், 'தேர்வு எழுதப்போகும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்கள். காலத்தை முறையாக பயன்படுத்துங்கள், ஒவ்வொரு பாடத்திற்கும், ஏற்றாற்போல் முறையான அட்டவணை போட்டு படிக்க தொடங்குங்கள். இலக்கை தீர்மானித்து படித்து வெற்றியை வசமாக்குங்கள்' என கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர்கள் பழனிவேலு, நாகேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் வடிவேல் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.