இளைஞர் திறன் திருவிழாவில் 671 பேருக்கு சான்றிதழ்
கீழ்பென்னாத்தூரில் நடந்த இளைஞர் திறன் திருவிழாவில் 671 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி தேவைப்படும் இளைஞர்களுக்கு இளைஞர் திறன் திருவிழா கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடந்தது.
மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சிஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்ண்ணு, வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாசலம், பேரூராட்சி தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி திட்ட அலுவலர் ஜான்சன் வரவேற்றார்.
விழாவில் 1,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர். இதில் 671 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி சான்றிதழை மாவட்ட இயக்க மேலாண்மை அலகுதிட்ட இயக்குனர் சையித்சுலைமான் வழங்கினார்.
விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கண்காணிப்பாளர் ஜானகி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு உதவித்திட்ட அலுவலர் வெங்கடேசன், தாட்கோ உதவி மேலாளர் ஜெயசுதா, திறன்மேம்பாட்டு கழக உதவி இயக்குனர் தனகீர்த்தி, இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் சீனுவாசன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் வசந்தகுமார் உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டனர். முடிவில் கீழ்பென்னாத்தூர் வட்டார இயக்க மேலாளர் சுகந்தி நன்றி கூறினார்.