போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
தூய்மை நகரத்துக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
கூடலூர்,
மாநிலம் முழுவதும் சுகாதாரத்தை பேணும் வகையில் ஜூன் மாதம் 3-ந் தேதி முதல் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. கூடலூர் நகராட்சி சார்பில், ஒவ்வொரு வாரமும் தூய்மை பணி, சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 8 அரசு பள்ளிகளில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் பேச்சு, கட்டுரை, பாடல், ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி கூடலூர் நகராட்சி மன்ற அரங்கில் நடைபெற்றது. இதற்கு நகராட்சி ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் சரவணன் முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் பரிமளா மாணவ-மாணவிகளுக்கு பரிசு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்களுக்கும் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.