சென்னையில் மழை வெள்ள தடுப்புப்பணியில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள், ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்


சென்னையில் மழை வெள்ள தடுப்புப்பணியில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள், ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
x

சென்னையில் மழை வெள்ள தடுப்புப்பணியில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள், ஊழியர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

சென்னை,

சென்னையில் கடந்த மழைக்காலத்தின்போது வெள்ள தடுப்புப்பணிகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் - ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா, சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வெள்ள தடுப்புப்பணிகளில் சிறப்பாக பணியாற்றியோருக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.

கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இந்த பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

அந்த வகையில் 586 பேருக்கு வழங்கும் அடையாளமாக, 44 பேருக்கு முதல்-அமைச்சர் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நெருக்கடி காலங்களில்...

தி.மு.க. அரசு பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியிருக்கிறது. இதில் 2 சாதனைகளை நாம் படைத்திருக்கிறோம். அதனால் மக்களிடத்திலே நமக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்திருக்கிறது. ஒன்று, கொரோனா என்ற கொடிய நோயை எதிர்த்து அதை வென்றோம். அது ஒரு பாராட்டு. இரண்டாவது, மழை-வெள்ளத்தில் இருந்து மக்களைக் காத்தோம், அது இரண்டாவது பாராட்டு.

கொரோனாவை கட்டுப்படுத்தியதற்கு பிறகு உடனடியாக ஒரு மிகப்பெரிய மழையை நாம் சந்தித்தோம். ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள் எதுவும் செய்யாமல் இருந்துவிட்ட காரணத்தால், அந்த முதல்முறை மழை எந்த அளவுக்கு பெய்தது? என்பது அனைவருக்குமே தெரியும். அந்த மழை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. ஆனால், அந்த நெருக்கடிகளை நாம் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு வரக்கூடிய காலக்கட்டங்களில் எப்படி நாம் செயல்பட வேண்டும்? என்று திட்டமிட்டோம்.

அடுத்த மழை வருவதற்கு முன்னால் அல்லது ஒரு வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னால், என்ன மழை பெய்தாலும் அந்த மழையின் காரணமாக தண்ணீர் எங்கும் தேங்கவில்லை என்ற ஒரு சூழலை உருவாக்குவதற்காக நாம் உறுதி எடுத்துக்கொண்டோம். அந்த உறுதியை எந்த அளவிற்கு நிறைவேற்றி காட்டினோம்? என்பதும் மக்களுக்கு தெரியும்.

அளவில்லா மகிழ்ச்சி

கடந்த முறை தண்ணீர் தேங்கியிருந்த பகுதிகள் தற்போது பிரச்சினை இல்லாமல் இருப்பது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதையெல்லாம் பார்த்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருந்தது. அந்த அளவிற்கு மக்கள் நம்மை மனதார பாராட்டினார்கள்.

5 விரலும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் அது ஒரு கையின் பலத்தை நாம் தெரிந்துகொள்ள முடியும். அப்படித்தான், தண்ணீர் தேங்கி நின்றால் ஒரு மணி நேரத்தில் மோட்டார் வைத்து அதை அகற்றியது மாநகராட்சி. நீர் நிலைகளைத் தூர் வாரி வைத்திருந்தது நம்முடைய நீர்வளத்துறை. சாலைகளை உடனடியாக சரி செய்து கொடுத்தது நெடுஞ்சாலைத்துறை. சீரான மின்சாரத்தை வழங்கியது மின்சாரத்துறை. பொதுமக்களுக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக்கொண்டது நம்முடைய காவல்துறை.

ஒவ்வொரு தெருவும் எனக்கு தெரியும்

இதைத்தான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி என்று நாம் சொல்கிறோம். எல்லார்க்கும் எல்லாம் சொல்கிறோம் அல்லவா அதுதான் திராவிட மாடல் ஆட்சி. எல்லோரும் சேர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்ட காரணத்தால்தான் இந்த வெற்றியை நம்மால் பெற முடிந்திருக்கிறது.

மழை வெள்ளக்காலத்தில் மக்களிடத்தில் நல்ல பெயர் எடுப்பது மிகமிக சிரமம். அதில் எனக்கு நிறைய அனுபவம் உண்டு. காரணம், நானும் இந்த மாநகராட்சியின் மேயராக 7 ஆண்டு காலம் இருந்தவன். சென்னையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு வார்டும் எனக்கு தெரியும், ஏன் ஒவ்வொரு தெருவும் எனக்கு தெரியும்.

மழை நின்ற பிறகு மட்டுமல்ல, மழை பெய்துகொண்டு இருக்கும்போதே ரெயின்கோட் போட்டுக்கொண்டு, நம்முடைய கமிஷனரை, நம்முடைய அதிகாரிகளை அழைத்துக்கொண்டு, அந்த பணிகளையெல்லாம் நேரடியாக பார்த்தவன் நான். இப்போதும் அப்படித்தான். இதுதான் மக்கள் பணி. இதுதான் கருணாநிதியின் பணி, கருணாநிதியின் பாணி. ஒரு சம்பவம் நடந்தவுடனே, அந்த இடத்திற்கு போய்விட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்க்க வேண்டும், அவர்களுக்கு நாம் ஆறுதல் சொல்ல வேண்டும் என்று என் மனம் துடிக்கிறது என்றால், அதற்கு காரணம் கருணாநிதி ஊட்டிய அந்த உணர்வுதான்.

மழைநீர் தேக்கமில்லா சென்னை

2021-ம் ஆண்டு பருவமழையின்போது பெற்ற அனுபவத்தைக் கொண்டு, உடனடியாக நாம் எல்லா வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் குறுகிய காலத்தில் செய்து முடித்தோம். அதன் பயனை 2022-ம் ஆண்டு பருவமழையின்போது கண்கூடாக பார்த்தோம். இனிவரும் ஆண்டுகளில், மழைநீர் தேக்கம் இல்லாத பருவமழைக் காலங்களை சென்னை வாழ் மக்கள் நிச்சயமாக பார்க்க இருக்கிறார்கள். இந்த அரசு மேலும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மக்கள் மகிழ்ச்சியே நமது இலக்கு. அந்த இலக்கை நோக்கியே நாம் செயல்பட்டு வருகிறோம். 'நம்பர் 1 முதல்-அமைச்சர், நம்பர் 1 தமிழ்நாடு' ஆகிய உயர்வும், பாராட்டும் என்பது ஒரு பக்கம். அந்த பாராட்டு தனிப்பட்ட ஸ்டாலினுக்கு கிடைத்த பாராட்டாக நான் கருதவில்லை. உங்களுடைய ஒவ்வொருடைய உழைப்பால்தான் அந்த பாராட்டும், அந்த பெருமையும் நமக்கு கிடைத்திருக்கிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கலந்துகொண்டடோர்

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், தலைமை செயலாளர் இறையன்பு, நகராட்சி நிர்வாகம்-குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பணியாளர்களுடன் உணவு சாப்பிட்ட மு.க.ஸ்டாலின்

விழாவில் பணியாளர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. இதில் பணியாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

சைவ-அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன. சைவத்தில் சாப்பாடு, சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், சப்பாத்தி, குருமா, இனிப்பும், அசைவத்தில் பிரியாணி, சிக்கன் கிரேவி, சிக்கன் 65, தயிர் வெங்காயம், சப்பாத்தி, குருமா, இனிப்பு உள்ளிட்ட உணவுகளும் இடம்பெற்றன.

அதேபோல ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழில், அவர்களது பெயரை குறிப்பிட்டு '2022-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது வெள்ள தடுப்பு பணிகளிலும், புயல் நேரங்களிலும் ஆற்றிய சிறந்த பணியை பாராட்டியும், மதிப்பில்லா சேவையை போற்றியும் இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது' என குறிக்கப்பட்டிருந்தது. மேலும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு பெட்டியில் அழகிய கைக்கடிகாரம் இருந்தது.


Next Story