2 குழந்தைகளுக்கு சாதி, மதம் அற்றவர் சான்றிதழ்


2 குழந்தைகளுக்கு சாதி, மதம் அற்றவர் சான்றிதழ்
x

சேரன்மாதேவியில் 2 குழந்தைகளுக்கு சாதி, மதம் அற்றவர் சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி தாலுகா பாப்பாக்குடி பொன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா மகன் ஜான் விக்டர் (வயது 36). இவர் சென்னையில் தொழில் செய்து வருகிறார். இவரும், விழுப்புரத்தை சேர்ந்த சுமித்ரா (33) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சாதி, மதத்தை சேர்ந்தவர்கள். இந்த தம்பதிக்கு ஆரா தமிழினி (5), அக்சரா மகிழினி (2) என்று 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஜான் விக்டர் தனது குழந்தைகள் 2 பேருக்கும் சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வழங்குமாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு சேரன்மாதேவி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இதுகுறித்து வருவாய்த்துறையினர் மூலம் விசாரணை நடத்தப்பட்டு, அந்த 2 குழந்தைகளுக்கும் சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. தாசில்தார் பாலசுப்பிரமணியம், குழந்தைகளின் தந்தை ஜான் விக்டரிடம் சான்றிதழை வழங்கினார். இதுபோன்ற சான்றிதழ் நெல்லை மாவட்டத்தில் வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story