இ-சேவை மையங்கள் மூலம் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் - கல்வித்துறை அறிமுகம்
இ-சேவை மையங்கள் மூலம் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் பெற்றுக்கொள்ள கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை,
பள்ளி கல்வியில் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை பெற இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இ-சேவை மையங்கள் மூலம் இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்ககத்தில் இருந்து மின்னஞ்சல் மூலமாக சார்ந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகின்றன.
எனவே அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் இணையதள செயலியின் மூலமாக பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடம் இருந்து சான்றிதழ் கோரி பெறப்படும் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலமாக உடனுக்குடன் அனுப்பி வைத்து விடவேண்டும்.
பெறப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகளின் அடிப்படையில் விண்ணப்பதாரரால் சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களின் நம்பகத்தன்மையை சரிபார்த்து விண்ணப்பதாரர் வழங்கிய தகவல் சரியானது என உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாகவே மின் கையொப்பம் செய்து சான்றை பதிவேற்றம் செய்திட வேண்டும். விண்ணப்பதாரர் வழங்கிய தகவல் தவறானது என்று கண்டறிந்தால் அந்த விண்ணப்பத்தை உரிய காரணத்துடன் ஆன்லைன் மூலமாகவே நிராகரிக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்று ஆன்லைன் மூலமாக மட்டுமே வழங்கப்பட வேண்டும். சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் கையினால் பூர்த்தி செய்து வழங்கக்கூடாது எனவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.