பெண்ணிடம் 6½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு
ஓசூரில் பெண்ணிடம் 6½ பவுன் தங்க சங்கிலி பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூரில் பெண்ணிடம் 6½ பவுன் தங்க சங்கிலி பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தங்க சங்கிலி பறிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பென்னாமடத்தை சேர்ந்தவர் கேசவன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி தீபா (வயது 38). இவர், ஓசூர் 2-வது சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு, தீபா தனது தந்தை மணியுடன் ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். மோரனப்பள்ளி ஜங்ஷன் பகுதியில் சென்றபோது, இருட்டான பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க 2 மர்ம நபர்கள், தீபாவின் கழுத்தில் இருந்த 6½ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
வலைவீச்சு
இதனால் தீபா மற்றும் அவரது தந்தை ஆகியோர் அதிர்ச்சி அடைந்து திருடன், திருடன் என சத்தம் போட்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மர்ம நபர்களை விரட்டி சென்றனர். ஆனால் அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசில் தீபா புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.