மழைநீர் வடிகாலில் கழிவுநீரை கலக்க விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை- நகரசபை தலைவர்
மழைநீர் வடிகாலில் கழிவுநீரை கலக்க விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகரசபை தலைவர் மன்னை சோழராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மழைநீர் வடிகாலில் கழிவுநீரை கலக்க விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகரசபை தலைவர் மன்னை சோழராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நகரசபை கூட்டம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகரசபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகரசபை தலைவர் மன்னை சோழராஜன் தலைமை தாங்கினார். நகராட்சி துணைத்தலைவர் கைலாசம், நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
திருச்செல்வி (அ.ம.மு.க.):- பாமணி ஆற்று பகுதியில் உள்ள மயானங்களை புதுப்பிக்க வேண்டும்.
பாரதிமோகன் (தி.மு.க.):- கோபிரளய குளத்திற்கு செல்லும் பிரதான வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
செந்தில் செல்வி (அ.ம.மு.க.):- பள்ளிகளை சுற்றி குட்கா, பான் மசாலா போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும்.
மழைநீர் வடிகால்
சுமதி (தி.மு.க.):- கோபாலசமுத்திரம் தெற்கு வீதியில் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும்.
மீனாட்சி சூரிய பிரகாஷ் (தி.மு.க.):- வானக்கார தெருவின் முகப்பு பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
அசோகன் (தி.மு.க.):- வடுவூர் வெண்ணாற்று வாய்க்காலில் இருந்து நீர் கொண்டு வருவதற்காக முன்பு இருந்த வாய்க்கால் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளது. இதை மீட்க வேண்டும்.
வெங்கடேஷ் (தி.மு.க.):- நகராட்சி தூய்மை பணியாளர்களின் சம்பளம் எவ்வளவு? என்பது குறித்தும், பகுதி நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு முழு நேரத்திற்கான சம்பளம் வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பு
பாலமுருகன் (தி.மு.க.):- மேல ஜைன தெரு, கீழ ஜைன தெருவில் தனியார் ஆக்கிரமித்துள்ள 30 ஆயிரம் சதுர அடி நகராட்சி இடத்தை மீட்க வேண்டும்.
ஐஸ்வர்யா மகாலட்சுமி (தி.மு.க.):- நடுவானிய தெருவில் வாய்க்கால் சீரமைத்து கொடுத்ததற்கு தலைவருக்கு நன்றி.
நகரசபை தலைவர்:- நகராட்சிக்கு சொந்தமான மழை நீர் வடிகால் வாய்க்கால்களில் கழிவு நீரை கலக்க விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வ.உ.சி. சாலை முதல் வடசேரி சாலை வரை உள்ள பைபாஸ் ரோடு பராமரிப்பு மற்றும் பல்வேறு பணிகளுக்காக நெடுஞ்சாலை துறை வசம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.