எதிர்கொண்ட சவால்கள், துன்பங்கள் அதிகம்: கருணாநிதியின் வாரிசு என்பதால் மட்டும் மு.க.ஸ்டாலின் உயர்ந்த நிலைக்கு வரவில்லை - நடிகர் விஜய்சேதுபதி பேட்டி


எதிர்கொண்ட சவால்கள், துன்பங்கள் அதிகம்: கருணாநிதியின் வாரிசு என்பதால் மட்டும் மு.க.ஸ்டாலின் உயர்ந்த நிலைக்கு வரவில்லை - நடிகர் விஜய்சேதுபதி பேட்டி
x

கருணாநிதியின் வாரிசு என்பதால் மட்டும் மு.க.ஸ்டாலின் உயர்ந்த நிலைக்கு வரவில்லை. அவர் எதிர்கொண்ட சவால்கள், துன்பங்கள் அதிகம் என்று நடிகர் விஜய்சேதுபதி கூறினார்.

மதுரை


கருணாநிதியின் வாரிசு என்பதால் மட்டும் மு.க.ஸ்டாலின் உயர்ந்த நிலைக்கு வரவில்லை. அவர் எதிர்கொண்ட சவால்கள், துன்பங்கள் அதிகம் என்று நடிகர் விஜய்சேதுபதி கூறினார்.

புகைப்பட கண்காட்சி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு, அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டின் பேரில் கிழக்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட மேனேந்தல் மைதானத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு புகைப்பட கண்காட்சி கடந்த 19-ந் தேதி தொடங்கியது. அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த கண்காட்சியை பள்ளி-கல்லூரி மாணவர்கள் உள்பட தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பார்வையிட்டனர். மேலும் தமிழக அமைச்சர்கள் மற்றும் நடிகர்கள் வடிவேலு, சூரி உள்ளிட்டோரும் பார்வையிட்டனர்.

நேற்று நடிகர் விஜய்சேதுபதி, இந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். அவருக்கு அமைச்சர் மூர்த்தி, கண்காட்சியை சுற்றி காண்பித்தார்.

பின்னர் விஜய்சேதுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது 70 ஆண்டுகால பொது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை, அரசியல் வரலாறு ஆகியவற்றை இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் மிகச்சிறப்பாக "முதல்-அமைச்சரின் பொது வாழ்க்கை பயணம்" குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. இந்த கண்காட்சியை நானும் நேரடியாக வந்து பார்வையிட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அதில் முதல்-அமைச்சர் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்ட போது நடந்த துயரங்கள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

அரசியல் வரலாறு

பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்களுடன், மு.க.ஸ்டாலின் இருக்கும் புகைப்படங்களை பார்க்கும் போது பிரமிப்பாக உணர்ந்தேன். கருணாநிதியின் வாரிசு என்பதால் மட்டும் அவர் இந்த உயர்ந்த பொறுப்புக்கு வந்து விடவில்லை. அவர் தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட துன்பங்கள், எதிர்கொண்ட சவால்கள் அதிகம் என்பதை இந்த கண்காட்சியை பார்வையிடும் அனைவரும் உணர்வார்கள். இன்றைய இளைஞர்கள் பாடப்புத்தகத்தோடு அரசியல் குறித்து தெரிந்துகொள்வது நல்லது. தமிழ்நாட்டின் வரலாறு, நம்மை ஆட்சி செய்த தலைவர்களின் வரலாறு ஆகியவற்றை தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த கண்காட்சியை அரசியலுக்கு அப்பாற்பட்டு மகளிர், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த ஆர்வமுடன் பார்வையிட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். கண்காட்சியை மிக எழுச்சியோடு நடத்துவதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பை பொன்னாக கருதுகிறேன். இதை சிறப்பாக நடத்துவதற்கு உழைத்த அனைவருக்கும் என பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story