திருவெண்ணெய்நல்லூர் அருகே சாமுண்டீஸ்வரி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே சாமுண்டீஸ்வரி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லூர்,
சாமுண்டீஸ்வரி கோவில்
திருவெண்ணெய்நல்லூர் அருகே பேரங்கியூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா 16 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா கடந்த 10-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜையும், மாலையில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதையாட்டி காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றவுடன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சாமுண்டீஸ்வரி எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரானது மாடவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் நிலையை வந்தடைந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர். விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.