தமிழ்நாட்டில் சில இடங்களில் மேலும் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் கோடை வெயிலுக்கு விடைக்கொடுக்கும் வகையில் ஆங்காங்கே தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. அதிலும் தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுவதுதான் இந்த மழைக்கு காரணமாக சொல்லப்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
மிதமான மழைக்கு வாய்ப்பு
அதன்படி, இன்று (புதன்கிழமை) தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், நாளையும் (வியாழக்கிழமை), நாளை மறுதினமும் (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது.
மழை அளவு
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், 'குன்றத்தூர், மதுராந்தகம், தரமணி தலா 8 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர், சிதம்பரம், அண்ணாமலை நகர், சிதம்பரம், மின்னல், அயனாவரம், டி.ஜி.பி. அலுவலகம் தலா 7 செ.மீ., சோழிங்க நல்லூர், செம்பரம்பாக்கம், திருத்தணி, பூந்தமல்லி, எம்.ஜி.ஆர். நகர், தண்டையார்ப்பேட்டை, புவனகிரி, பணப்பாக்கம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை நுங்கம்பாக்கம், ஆலந்தூர் தலா 6 செ.மீ., செங்கல்பட்டு, சத்யபாமா பல்கலைக்கழகம், திருவள்ளூர், சென்னை கலெக்டர் அலுவலகம், ஆவடி, திருவாலங்காடு, அம்பத்தூர், வாலாஜாபாத், தண்டராம்பேட்டை, ஆரணி, திருக்கழுக்குன்றம், நந்தனம், ஏ.சி.எஸ். கல்லூரி தலா 5 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.