தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் 8-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 9-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.
இதன் காரணமாக இன்று (07.05.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு. நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பதார், அரியலூார். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.