தமிழகம், புதுச்சேரியில் 6-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகம், புதுச்சேரியில் 6-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்
x

வளிமண்டல சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 6-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று மழைக்கான அறிகுறியுடன் இதமான சூழல் நிலவியது. நகரின் ஒரு சில இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்தது. காலையில் இருந்து மாலை வரையிலும் ரம்மியமான சூழல் நிலவியதால், சென்னைவாசிகள் குளிர்பிரதேச பகுதிகளில் இருப்பது போன்று உணர்ந்தனர்.

இந்தநிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 6-ந்தேதி வரையிலும் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் நாளை ஓரிரு இ டங்களில் கன முதல் மிக கன மழையும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

இடி, மின்னலுடன் மழை

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் நாளைமறுதினம் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் வருகிற 6-ந்தேதி ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். வட தமிழக கடலோரப்பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

இதேபோல 6-ந்தேதி வரை லட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேவாலாவில் 4 செ.மீ. மழை

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி புதுச்சேரி, தேவாலாவில் அதிகபட்சமாக தலா 4 செ.மீ., வலாஞ்சியில் 3 செ.மீ., விருதுநகர், அவானூர், காஞ்சீபுரம், கூடலூர் பஜார, நடுவட்டம், வளத்தி, மானாமதுரை மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் தலா 2 செ.மீ., மணிமுத்தாறு அணை, சூலூர், காவேரிப்பாக்கம், அருப்புக்கோட்டை, வால்பாறை, திண்டிவனம், திருப்பத்தூர், மதுராந்தகத்தில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.


Next Story