சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் பாராட்டு
நிலவில் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் நேற்று வெற்றி கரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
சென்னை,
இந்த பிரபஞ்சத்தில் மனிதன் வாழும் பூமிப்பந்தை தவிர வேறொரு கோளில் உயிர்கள் வாழும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்ற தேடல்கள் நீண்டுகொண்டே இருக்கின்றன.
சிறப்பு திட்டங்கள்
அதிலும் பூமியின் துணைக்கோளான நிலவு (சந்திரன்) மீதான விஞ்ஞானிகளின் கண்ணோட்டம் முக்கியமானது. நிலவை பாடாத கவிஞன் இல்லை என்பது போல, அதை ஆய்வு செய்யாத விண்வெளி ஆய்வுத்துறைகளும் இல்லை.
50 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் மனிதன் காலடி வைத்து மகத்தான சாதனை புரிந்து விட்டான். ஆனாலும் அந்த கோள் மீதான விஞ்ஞானிகளின் காதல் நாளுக்கு நாள் அதிகரித்ேத வருகிறது.
நிலவு குறித்த இந்த ஆய்வில் அமெரிக்கா, ரஷியா, சீனாவை தொடர்ந்து இந்தியாவும் அளப்பரிய சாதனைகளை படைத்து வருகிறது. இதற்காகவே இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரத்யேகதிட்டங்களை உருவாக்கி வருகிறது.
சந்திரயான் விண்கலம்
இஸ்ரோவின் கனவு திட்டமான நிலவை ஆய்வு செய்யும் பணிகளுக்காக, சந்திரயான்-1 விண்கலத்தை வடிவமைத்து கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது.
அடுத்ததாக, உலகில் எந்த நாடுகளும் செல்லாத நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்ய ரூ.978 கோடி மதிப்பில் சந்திரயான்-2 விண்கலம் உருவாக்கப்பட்டு, கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இதில் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதற்காக லேண்டர், ரோவர் மற்றும் ஆர்பிட்டரும் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விக்ரம் லேண்டரின் மெதுவான தரையிறக்கம் சவாலாக மாறி, நிலவின் தரைப்பகுதியில் மோதி செயலிழந்தது.
அதேநேரம் விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.
ரூ.615 கோடியில் சந்திரயான்-3
இந்த சறுக்கலில் சற்றும் மனம் தளராத இஸ்ரோ விஞ்ஞானிகள், அடுத்தகட்டமாக சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தனர்.
இந்த முறை எந்த தொழில்நுட்பக் கோளாறும் ஏற்படாத வகையில் விஞ்ஞானிகள் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து ரூ.615 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை சிறப்பாக உருவாக்கி உள்ளனர்.
சந்திரயான்-3 விண்கலம் 3 ஆயிரத்து 900 கிலோ எடை கொண்டது. இதில் 7 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. நிலவின் மேல்பகுதியை முத்தமிடுவதற்காக சந்திரயான்-3 விண்கலத்துடன் லேண்டர் மற்றும் ரோவர் கருவிகளும் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்தியாவின் குண்டு பையன் மற்றும் பாகுபலி ராக்கெட் என்ற செல்லப் பெயர்களை கொண்ட அதிக எடையை தாங்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் இதற்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த ராக்கெட் தற்போது எல்.வி.எம்.3-எம்4 ராக்கெட் என்று மேம்படுத்தப்பட்டு உள்ளது. இதில் விண்கலத்தை இணைத்து செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன.
தீப்பிழம்பை கக்கியபடி கிளம்பியது
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் அனைத்து பரிசோதனைகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன. அங்குள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலத்தை செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கியது.
இதற்கான 25½ மணிநேர கவுண்டவுனை நிறைவு செய்து சந்திரயான்-3 விண்கலத்துடன், கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவுகளையும் சுமந்து கொண்டு எல்.வி.எம்.3-எம்4 ராக்கெட் நேற்று பிற்பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடிக்கு தீப்பிழம்பை கக்கியபடி விண்ணை நோக்கி புறப்பட்டது.
ராக்கெட் புறப்பட்ட 16 நிமிடம் 15 வினாடிகளில் நிர்ணயிக்கப்பட்ட 179 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்ததும் சந்திரயான்-3 விண்கலத்தை திட்டமிட்டபடி குறிப்பிட்ட இலக்கில் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது.
உலகமே காத்திருப்பு
இந்த பயணத்தில் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், 3-வது நிலையில் பொருத்தப்பட்டிருந்த சி.இ.20 கிரையோஜெனிக் எஞ்ஜின் வெற்றிகரமாக இயங்கி சந்திரயான்-3 விண்கலத்தை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்று பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தியது.
அதையடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு நிலையம், விண்கலத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் சந்திரயான்-3 விண்கலம், சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது.
சந்திரயான்-3 விண்கலம் 40 முதல் 42 நாட்கள் பயணிக்கும். இதன் லேண்டர் கருவி ஆகஸ்டு 23-ந்தேதி மாலை 5.45 மணிக்கு நிலவில் தரையிறங்கும்.
அந்த கணத்துக்காகஇந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் காத்திருக்கிறது.
சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கினால், அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்ததாக நிலவை முத்தமிட்ட 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவை அடையும்.
ஒரு நிலவுநாள் ஆயுள்
இந்த விண்கலம் பூமியை 56 முறை சுற்றி வரும். பூமியில் இருந்து குறைந்தபட்சமாக 170 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம், 36 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திலும் சுற்றி வரும்.
சந்திரயான்-3 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ரோவர் சாதனம் நிலவில் தரையிறங்கிய பின்னர் ஒரு நிலவு நாள் மட்டுமே ஆராய்ச்சி பணியில் ஈடுபடும். ஒரு நிலவு நாள் என்பது பூமியை பொறுத்தவரை 14 நாட்களுக்கு சமமாகும். அதன்பின்னர், அதன் ஆயுள் காலம் முடிந்துவிடும். அதற்குள் விஞ்ஞானிகளுக்கு தேவையான அனைத்து புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அது திரட்டித் தரும்.
பார்வையாளர்கள் பரவசம்
சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படுவதை கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், சக விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.
ராக்கெட் ஏவுவதை கண்டுகளிப்பதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலக கட்டிடங்கள், பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த பள்ளி மாணவர்கள் தேசியக்கொடியை அசைத்து தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பொதுமக்களும் பார்த்து பரவசம் அடைந்தனர். வானம் நேற்று மேகமூட்டமாக இருந்ததால் ராக்கெட் ஏவப்படும் நிகழ்வை சில நொடிகள் மட்டுமே காணமுடிந்தது.
ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது டுவிட்டர் தளத்தில், 'விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டும் வகையில் சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதற்காக இஸ்ரோ குழுவுக்கும், அயராது உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்' என குறிப்பிட்டு உள்ளார்.
இது விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றத்துக்கான நாட்டின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை நிரூபிப்பதாக கூறியுள்ள திரவுபதி முர்மு, நிலவு பயணம் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில், 'இந்தியாவின் விண்வெளி பயணத்தில் சந்திரயான்-3 புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது.ஒவ்வொரு இந்தியனின் கனவுகளையும், லட்சியங்களையும் உயரத்துக்கு எடுத்து சென்றுள்ளது. இந்த முக்கியமான சாதனை நமது விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். அவர்களின் உத்வேகத்துக்கும், புத்திசாலித்தனத்துக்கும் நான் தலை வணங்குகிறேன்' என குறிப்பிட்டு இருந்தார்.
காங்கிரஸ் பாராட்டு
சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்காக இஸ்ரோவை காங்கிரஸ் கட்சி பாராட்டி உள்ளது.
கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டுவிட்டர் தளத்தில், 'நமது கூட்டு மகிழ்ச்சி நிலவின் மேல் உள்ளது. நமது விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் சந்திரயான்-3 திட்டத்தை வெற்றிகரமாக ஏவுவதில் ஈடுபட்ட அனைவரின் மகத்தான புத்திசாலித்தனம், அர்ப்பணிப்பு, திறமை மற்றும் கடின உழைப்புக்கு நன்றி' என குறிப்பிட்டு இருந்தார்.
ராகுல் காந்தி தனது டுவிட்டர் தளத்தில், ''100 கோடிக்கும் அதிகமான மக்கள் இன்று வானத்தை நோக்கி பெருமிதத்துடன் பார்த்தோம். 1962-ல் இஸ்ரோ தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து விஞ்ஞானிகள் செலுத்திய கடுமையான உழைப்பின் பலன்தான் சந்திரயான்-3. இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் நிலவின் பரப்பில் விண்கலத்தை இறக்கிய 4-வது தேசம் என்ற பெருமையை இந்தியா பெற்றுவிடும். அது நிச்சயமாக ஒரு வியத்தகு கொண்டாட்டமாக இருக்கும். இஸ்ரோ குழுவினருக்கு பாராட்டுகள்'' என்று பதிவிட்டுள்ளார்.