ரெயில் சேவையில் மாற்றம்
ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணி
தென்னக ரெயில்வே திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட கிள்ளை - சிதம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையேயும், நீடாமங்கலம்-கொரடாச்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையேயும் கடந்த 1-ந் தேதி முதல் தண்டவாளத்தில் என்ஜினீயரிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே வருகிற 31-ந் தேதி வரை பின்வரும் ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகின்றன. சில ரெயில்கள் 31-ந்தேதி வரை தாமதமாக வந்து சேரும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, தினமும் மாலை 3.45 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் மயிலாடுதுறை-விழுப்புரம் முன்பதிவு இல்லா எக்ஸ்பிரஸ் (வண்டிஎண்: 06692) மயிலாடுதுறை-கடலூர் துறைமுகம் சந்திப்பு இடையே வருகிற 31-ந் தேதி வரை சனி, ஞாயிறு, திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் அந்த ரெயில் கடலூர் துறைமுகம் சந்திப்பில் இருந்து மாலை 5.24 மணிக்கு விழுப்புரம் நோக்கி புறப்படும்.
இதேபோல் தினமும் காலை 10.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் திருச்சி- காரைக்கால் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 06880) தஞ்சாவூர்-காரைக்கால் இடையே வருகிற 31-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் இந்த ரெயில் திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வரை மட்டுமே செல்லும். மேலும் தினமும் மாலை 3.10 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்படும் காரைக்கால்-திருச்சி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 06739) காரைக்கால்-தஞ்சாவூர் இடையே வருகிற 31-ந் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் இந்த ரெயில் தஞ்சாவூரில் இருந்து மாலை 5.50 மணிக்கு திருச்சிக்கு புறப்படும்.
தாமதம்
அத்துடன் வருகிற 31-ந்தேதி வரை சனி, ஞாயிறு, திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் விழுப்புரம்-மயிலாடுதுறை ரெயில் (வண்டி எண்: 06691) விழுப்புரத்தில் இருந்து மாலை 2.25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 90 நிமிடங்கள் தாமதமாக மாலை 3.55 மணிக்கும், மயிலாடுதுறை-திருவாரூர் ரெயில் (வண்டி எண்: 06695) மயிலாடுதுறையில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 75 நிமிடங்கள் தாமதமாக இரவு 7.30 மணிக்கும், திருவாரூர்-மயிலாடுதுறை ரெயில் (வண்டி எண்: 06542) திருவாரூரில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 45 நிமிடங்கள் தாமதமாக இரவு 9.05 மணிக்கும் புறப்படும்.
இதேபோல் வருகிற 31-ந் தேதி வரை தினமும் காரைக்கால்-தஞ்சாவூர் ரெயில் (வண்டி எண்: 06457) காரைக்காலில் இருந்து பிற்பகல் 12.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 60 நிமிடங்கள் தாமதமாக பகல் 1.30 மணிக்கும், தஞ்சாவூர்-திருச்சி ரெயில் (வண்டி எண்:06683) தஞ்சாவூரில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 25 நிமிடங்கள் தாமதமாக 4.45 மணிக்கும் புறப்படும்.