சட்டங்களின் பெயரை இந்தி, சமஸ்கிருத மொழியில் மாற்றுவதா? சோவியத் ரஷியா போல இந்தியா சிதறும் - வைகோ


சட்டங்களின் பெயரை இந்தி, சமஸ்கிருத மொழியில் மாற்றுவதா? சோவியத் ரஷியா போல இந்தியா சிதறும் - வைகோ
x

நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் முயற்சியை பாஜக அரசு கைவிட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

சென்னை,

நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் முயற்சியை பாஜக அரசு கைவிட வேண்டும். இல்லையேல் சோவியத் யூனியன் நிலைமைதான் இந்தியாவிற்கும் ஏற்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை ஆங்கிலேயர் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டாலும், இதில் பல மாற்றங்கள் இடை இடையே செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில், தற்போது மொத்தமாக இதன் பெயர், கூறுகளை மாற்றி திருத்த புதிய சட்ட முன்வரைவு ஒன்றை நாடாளுமன்றத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா தாக்கல் செய்துள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை புதிய பெயர் கொண்ட சட்டங்கள் மூலம் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதீய நியாய சன்ஹிதா, குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, இந்திய சாட்சியச் சட்டத்திற்குப் பதிலாக பாரதீய சாக்ஷ்யா என அழைக்கப்படும் என்று இந்த சட்ட திருத்த முன்வரைவில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா என்ற பெயரையே மாற்றத் துடிக்கும் இந்துந்துவ சனாதனக் கூட்டம், இதற்கு முன்னோட்டமாக சட்டங்களில் உள்ள 'இந்திய' என்ற பெயரை 'பாரதீய' என்று மாற்ற முனைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இயங்கி வரும் மோடி அரசு, செத்துப் போன சமஸ்கிருத மொழிக்கும், இந்தி மொழிக்கும் செல்வாக்குத் தேட முயற்சிப்பதும், நகரங்கள், ஊர்கள் பெயர்களை மாற்றி வருவதும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

அதன் உச்சமாக சட்டங்களின் பெயரையும், ஏன் நாட்டின் பெயரையும் மாற்றிட துணிந்து விட்டது.

ஒன்றிய பாஜக அரசின் இந்நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது. நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இல்லையேல் சோவியத் யூனியன் நிலைமைதான் இந்தியாவிற்கும் ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story