மதுரை அரசு ஆஸ்பத்திரி சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம்


மதுரை அரசு ஆஸ்பத்திரி சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம்
x

மதுரை அரசு ஆஸ்பத்திரி சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரை

மதுரை அரசு ஆஸ்பத்திரி சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை அரசு ஆஸ்பத்திரி

மதுரை மாநகரின் முக்கிய பகுதியான கோரிப்பாளையம் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. தென் மாவட்டத்தின் மிக முக்கிய மருத்துவமனையாக இது உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகன பயன்பாடு அதிகம் காணப்படுகிறது. இதுபோல், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள், ஊழியர்கள், பயிற்சி டாக்டர்கள் மற்றும் 200-க்கும் குறைவில்லாத ஆம்புலன்சுகள் பயணிக்கும் முக்கியமான சாலையாகவும் உள்ளது.

இந்த நிலையில், மதுரை வைகை ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட ஓபுளா பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று தமிழக அரசால் திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரி அமைந்துள்ள பனகல் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஒருவழிப்பாதையாக மாற்ற காவல்துறை திட்டமிடப்பட்டு, கீழ்கண்ட மாற்றங்களுடன் அமல்படுத்தப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம்

அதன்படி, கோரிப்பாளையம் சந்திப்பிலிருந்து ஆவின் சந்திப்பு நோக்கி செல்லக்கூடிய வாகன போக்குவரத்தில் மாற்றம் இல்லை. திருவள்ளுவர் சிலை, அண்ணா பஸ் நிலையத்திலிருந்து கோரிப்பாளையம் நோக்கி செல்லக்கூடிய அரசு பஸ் மற்றும் வர்த்தக வாகனங்கள் பனகல் சாலை-சேவாலயம் சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்டு, இடதுபுறமாக திரும்பி வைகை வடகரை சாலையின் வலதுபுறமாக சென்று செல்லூர், தத்தனேரி மற்றும் திண்டுக்கல் சாலைக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமுக்கம், தல்லாகுளம் செல்லும் வாகனங்கள் வைகை வடகரை சாலையை பயன்படுத்தி குமரன் சாலையில் வலதுபுறமாக திரும்பி பாலம் ஸ்டேஷன் சாலை, கோரிப்பாளையம் வழியாக செல்ல வேண்டும்.

இன்று முதல் மாற்றம்

சிம்மக்கல் வழியாக பெரியார் பஸ் நிலையம் செல்லும் பஸ்கள் வைகை வடகரை சாலை வழியாக புதிதாக கட்டப்பட்ட ஓபுளா பாலம், முனிச்சாலை சந்திப்பு, யானைக்கல் வழியாக செல்வதன் மூலம் ஏ.வி. பாலத்தின் போக்குவரத்து நெருக்கடி குறையும். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் டாக்டர்கள், ஊழியர்கள் சிவசண்முகம்பிள்ளை சாலை கிழக்கு வாசல் வழியாக ஆஸ்பத்திரிக்கு செல்லலாம். சிவசண்முகம்பிள்ளை சாலையிலிருந்து கோரிப்பாளையத்திற்கு வாகனங்கள் செல்ல முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து வரும் ஆம்புலன்சுகள் வைகை வடகரை, சிவசண்முகம்பிள்ளை சாலை, மருத்துவமனை கிழக்கு வாசல் மற்றும் கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக மருத்துவமனைக்கு செல்லலாம்.

இந்த போக்குவரத்து மாற்றத்துடன் சோதனை போக்குவரத்து ஓட்டம் இன்று (ஞாயிறு) முதல் தொடங்க இருக்கிறது. வாகன போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள், மருத்துவர்கள், அலுவலர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கும்படி மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story