கழிவுநீர் ஓடையாக மாறி வரும் வாய்க்கால்


கழிவுநீர் ஓடையாக மாறி வரும் வாய்க்கால்
x

வாய்க்கால் கழிவுநீர் ஓடையாக மாறி வருகிறது.

திருவாரூர்

திருவாரூர் நகரில் கழிவுநீர் ஓடையாக வாய்க்கால் மாறி வருகிறது. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

'பி' சேனல் வாய்க்கால்

திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் இருந்து கேக்கரை பகுதிக்கு பாசனம் தரும் 'பி' சேனல் வாய்க்கால் நகர் பகுதி வழியாக செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் கேக்கரை பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடைபெற்று வந்தது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் இருந்து வருவதால், பாசன வசதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலந்து வருவதால் வாய்க்கால் கழிவு நீர் ஓடையாக மாறி வருகிறது.

சுகாதார சீர்கேடு

மேலும் இந்த வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகின்றன. தூர்நாற்றமும் வீசுவதால், அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மழை காலங்களில் தண்ணீர் வடிவதற்கு வடிகாலாகவும் உள்ள இந்த வாய்க்கால், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் நகராட்சி சார்பில் தூர்வாரப்பட்டது.

அதன் பின்னர் வாய்க்கால் கவனிப்பாரின்றி கிடக்கிறது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் கழிவுநீர் ஓடையாக மாறி வரும் 'பி' சேனல் வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆக்கிரமிப்புகள்

வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தேவையின்றி கழிவு நீர் வாய்க்காலில் கலப்பதையும் தடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story