முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது திருவாரூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்
வருமானத்துக்கு அதிகமாக ரூ.127½ கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது திருவாரூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.127½ கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது திருவாரூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது வழக்கு
அ.தி.மு.க. ஆட்சியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராகஇருந்தவர் காமராஜ். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதி காமராஜ் மற்றும் அவருடைய மகன்கள் இனியன், இன்பன், நண்பர்கள் சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
51 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ேசாதனை
அமைச்சராக காமராஜ் பதவி வகித்த காலத்தில் ரூ.58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் சார்பில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அவருடைய வீடு மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வீடு என தமிழகம் முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் நேற்று திருவாரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் கோர்ட்டில் 810 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், காமராஜ் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவர் தனது நண்பர்களான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதயகுமார் ஆகியோரின் உதவியுடன் தஞ்சையில் ஒரு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பெயரில் சொத்துக்களை வாங்கி அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் அவருடைய மகன்கள் பெயர்களில் தஞ்சையில் ஆஸ்பத்திரி கட்டியும், இதர வகைகளிலும் ரூ.127 கோடியே 49 லட்சத்து 9 ஆயிரத்து 85 அளவிற்கு தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரிடம் அனுமதி
குற்றப் பத்திரிகையை மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு சபாநாயகரிடம் அனுமதி பெற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.