உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் தேரோட்டம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது
ஆர்.எஸ்.மங்கலம்,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
சதுர்த்தி திருவிழா
ராமநாதபுரம் அருகே உப்பூரில் ராமர் வணங்கிய பெருமையுடைய வெயிலுகந்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சதுர்த்தி திருவிழா கடந்த 22-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் வெள்ளி மூஷிக வாகனம், சிம்ம வாகனம், மயில் வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினந்தோறும் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து அருள் பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. தொடர்ந்து சித்தி, புத்தி தேவியருடன் வெயிலுகந்த விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து அருள்பாலித்தார்.
தேரோட்டம்
மோர்பண்ணை கிராமதலைவர் சிங்காரம், செயலாளர் மெய்யழகன் மற்றும் நிர்வாகிகள், தேவகோட்டை ஜமீன்தார் நாராயண செட்டியார், உப்பூர் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், கடலூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி பாலன் ஆகியோர் முன்னிலையில் நேற்று மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவிழாவில் இன்று உப்பூர் கிருஷ்ணன் தீர்த்தவாரி மண்டகப்படியாரின் நிகழ்வாக காலை 9 மணிக்கு விநாயகர் கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு சென்று வந்தவுடன் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இரவு வெட்டுக்குளம் வாசுதேவன் மண்டகப்படியார் நிகழ்ச்சியில் இரவு 7 மணி அளவில் விநாயகர் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இரவு 10 மணிக்கு வள்ளி திருமணம் நாடகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன் தலைமையில், திருவாடானை சரக பொறுப்பாளர் பாண்டியன், கோவில் விசாரணைதாரர் முருகன், சிவாச்சாரியார்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.