சிவகங்கை, திருப்புவனம் கோவில்களில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
சிவகங்கை, திருப்புவனம் கோவில்களில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
திருப்புவனம்,
சிவகங்கை, திருப்புவனம் கோவில்களில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
பங்குனி திருவிழா
திருப்புவனத்தில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவிலின் பங்குனி திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டம்
இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் புஷ்பவனேசுவரரும், மற்றொரு தேரில் சவுந்திரநாயகி அம்மனும் தனித்தனியாக எழுந்தருளினார்கள். பின்பு காலை 9.50 மணியளவில் தேரோட்டம் ஆரம்பமானது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு 2 தேர்களையும் வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேர்கள் திருப்புவனம் கீழரதவீதி, மதுரை- மண்டபம் தேசிய நெடுஞ்சாலை, சந்தை திடல், மேல ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக வலம் வந்து மதியம் 12.10 மணியளவில் நிலையை வந்தடைந்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
தேரோட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் நேரில் வந்து பார்வையிட்டார். மேலும் மானாமதுரை துணை சூப்பிரண்டு கண்ணன் முன்னிலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருப்புவனம் சரக கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
சிவகங்கை சுப்பிரமணியசாமி கோவில்
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி கோவில் திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி முருகன், வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகளும் நடைபெற்றது. இரவு தினசரி ஒரு வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்தார். 8-ம் நாளான நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடைபெற்றது. 9-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது இதைத்தொடர்ந்து மாலை 5.25 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகன், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி தேரோடும் வீதிகளில் வலம் வந்தார். தேரோட்டத்தை சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன், தேவஸ்தான மேலாளர் இளங்கோ, நகர்சபை தலைவர் துரை ஆனந்த், துணைத்தலைவர் கார் கண்ணன், கோவில் கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பக்தர்கள் முருகா, முருகா என்ற பக்தி கோஷம் முழங்கியபடியே தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதியின் வழியாக வந்து இரவு 7.30 மணி அளவில் நிலைக்கு வந்து சேர்ந்தது.. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான ஊழியர்கள் செய்திருந்தனர்.