பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று இரவு தாயமங்கலம் கோவிலில் மின் அலங்காரத்தில் தேரோட்டம்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று இரவு மின் அலங்காரத்தில் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.
இளையான்குடி
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று இரவு மின் அலங்காரத்தில் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.
தாயமங்கலம் கோவில்
இளையான்குடி அருகே உள்ளது தாயமங்கலம். இங்கு இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழா கடந்த 29-ந் தேதி இரவு கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி காட்சியளித்தார். நேற்று பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மின் அலங்கார தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று இரவு 7.15 மணியளவில் மின் அலங்காரத்துடன் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை பக்தர்கள் பால்குடம், அக்னி மற்றும் அலகு குத்துதல், அங்க பிரதட்சணம், மாவிளக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
மாலை 5.50 மணியளவில் ஊஞ்சல் வைபவம் நிகழ்ச்சியும், இரவு 10.20 மணியளவில் பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை மறுநாள் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவையொட்டி தாயமங்கலம் கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை, பரமக்குடி, சிவகங்கை, காரைக்குடி, காளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் மு.வெங்கடேசன் செட்டியார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.