சுகவனேசுவரர் கோவிலில் தேரோட்ட ஏற்பாடுகள் தீவிரம்
சேலம் சுகவனேசுவரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தேரோட்ட விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சுகவனேசுவரர் கோவில்
சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் வைகாசி விசாக திருவிழா தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 2-ந் தேதி நடக்கிறது. தினமும் சுகவனேசுவரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. தினமும் காலை மற்றும் மாலையில் சாமி, அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி நடந்த வருகிறது.
நேற்று காலை 8.30 மணிக்கு பல்லக்கில் சாமி, அம்மன் புறப்பாடு மற்றும் மண்டல பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின்னர் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, வெள்ளி ரிஷப வாகன காட்சியும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கம்புகள் கட்டும் பணி
இது ஒருபுறம் இருக்க, டவுன் கடைவீதியில் ராஜகணபதி கோவில் அருகில் உள்ள தேரை தேரோட்டத்திற்கு அலங்காரம் செய்யும் பணிகள் தொடங்கி உள்ளது. இதற்காக தேரில் 10 அடிக்கு மேல் கம்புகள் கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் 3 நாட்களில் தேரை அலங்கரிக்கும் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2-ந் தேதி காலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் வழிபாடும், அதன்பிறகு 7 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருள் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.