பவானீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ஊட்டி பவானீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. தோடர் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து தேரை இழுத்தனர்.
ஊட்டி,
ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ஊட்டி பவானீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. தோடர் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து தேரை இழுத்தனர்.
ஆருத்ரா தரிசனம்
ஆண்டுதோறும் மார்கழி மாத பவுர்ணமி தினத்தன்று திருவாதிரை நட்சத்திரத்தில், அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம். இதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று தொடங்கியது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. மங்கல வாத்தியங்கள் முழங்க சுவாமிகளுக்கு சாந்து கட்டளை நடந்தது.
தொடர்ந்து நடராஜருக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம், திருநீறு, இளநீர் உள்பட 12 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக விரதம் இருந்த பெண்கள் படையல் வைத்து வழிபாடு நடத்தினர்.
தேரோட்டம்
இதேபோல் ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் உள்ள பவானீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா மகோற்சவ கணபதி, சூரிய பகவான் பூஜையுடன் தொடங்கியது. தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய வழிபாடு நடந்தது. நேற்று காலை சிறப்பு பூஜைகளுடன் திருத்தேர் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் அம்ரித் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
தேரில் பவானீஸ்வரர், பவானி அம்மாள், சிவகாம சுந்தரேஸ்வரி அம்மாளுடன் நடராஜ மூர்த்தி எழுந்தருளினார். தோடர் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து தேரை இழுத்தனர். கோவிலில் இருந்து தேர் புறப்பட்டு லோயர் பஜார், மாரியம்மன் கோவில் வீதி, கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. முக்கிய வீதியில் தோடர் இன ஆண்கள் பாரம்பரிய நடனம் ஆடினர்.
இதில் அனைத்து மந்துகளில் இருந்தும் ஆண்கள் கலந்துகொண்டு ஊர்வலமாக வந்தனர். மதியம் 2 மணிக்கு நடராஜர் அபிஷேகம், சிறப்பு ஹோமம் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு பூர்ணாகுதி, மகா தீபாரதனை நிகழ்ச்சிகள் நடந்தன. இதேபோல் பிற சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.