பல்பாக்கியில் மக மாரியம்மன் கோவில் தேரோட்டம்
பல்பாக்கியில் மக மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
ஓமலூர்:
ஓமலூர் அடுத்த பல்பாக்கி கிராமத்தில் உள்ள ஓங்காளியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று மகமாரியம்மன் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஓமலூர் தொகுதி எம்.எல்.ஏ. மணி, முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன், ஓமலூர் தாசில்தார் வல்ல முனியப்பன், ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் அசோகன், கோவிந்தராஜ், சேரன் செங்குட்டுவன், மணிமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர், கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலைக்கு வந்தடைந்தது.
இதன் தொடர்ச்சியாக இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு மக மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கரகம், காவடி எடுத்து வந்தும்,மாவிளக்கு பூஜை செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இரவு 10 மணிக்கு சத்தாபரணம் நடக்கிறது. இதில் அம்மன் புஷ்பபல்லக்கில் வீதி உலாவும், வாண வேடிக்கையும் நடைபெறும். இதையொட்டி நையாண்டி மேளத்துடன் கரகாட்டமும் நடக்கிறது. நாளை(சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டுதல், சுவாமி மெரமனை, அபிஷேக பூஜையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.