சாலை கெங்கையம்மன் கோவிலில் தேரோட்டம்
சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது.
வேலூர் சத்துவாச்சாரியில் சாலை கெங்கையம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்து வருகிறது. விழாவின் 5-ம் நாளாக காலை சிறப்பு நிகழ்ச்சியாக, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் சிரசு, சிறப்பு பூஜைகள் செய்து ஏற்றப்பட்டு திருவீதி உலா நடந்தது. தேருக்கு முன்னதாக பூங்கரகம், சிம்ம வாகனத்தில் சாலை கெங்கையம்மன் உற்சவருடன் திரளான பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
தேர் சென்றபோது அம்மன் சிரசுக்கு வீடுகள் முன் நின்று பெண்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். சிலர் குழந்தைகளை அம்மன் சிரசு முன்பு ஏற்றிவிட்டு வழிபட செய்தனர்.
விஜயராகவபுரம் முதல் தெரு, இரண்டாவது தெரு வழியாக நேதாஜி நகர், மந்தைவெளி ரோடு போன்ற பகுதிகளுக்கு சென்ற தேதர் பின்னர் மீண்டும் கோவிலை அடைந்தது. மாலையில் கச்சேரி, பக்தர்களின் கொக்கலிக்கட்டை நடனம், புலிவேடம், சிலம்பாட்ட நிகழ்ச்சியிலும் நடைபெற்றன. இன்று அம்மன் சிரசு ஏற்ற விஸ்வரூப காட்சியும் நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை சத்துவாச்சாரி முத்தரையர் சமுதாய நிர்வாகிகள், ஆலய ஆலோசகர்கள், நிர்வாகிகள், காப்பாளர்கள், நகர இளைஞரணி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.